சாக்கோபார்..! - குறுங்கதை
காலையில் எழுந்ததில் இருந்தே என் 8 வயது மகள், ``அப்பா இன்னைக்கு பீச்சுக்கு போகலாம்பா’’ என்று ஒரே தொல்லை கொடுத்து பள்ளிக்கு லீவும் போட்டுவிட்டாள்.
அது ஒரு வேலை நாள்... எனக்கு அலுவலகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இரண்டு நாள்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது.
அந்த இரண்டு நாள்களுக்குப் பதில் இனிவரும் வார இறுதிகளில் வேலை வைத்து கணகச்சிதமாகக் கணக்கு தீர்க்கப்படுமென்பது வேறு விஷயம்.
காலையில் எழுந்ததில் இருந்தே என் 8 வயது மகள், ``அப்பா இன்னைக்கு பீச்சுக்கு போகலாம்பா’’ என்று ஒரே தொல்லை கொடுத்து பள்ளிக்கு லீவும் போட்டுவிட்டாள்.
அப்படி இப்படி என்று 10 மணிக்கு பீச்சுக்கு கிளம்பினோம் நானும் என் மகளும்.
என் மனைவி அலுவலகத்தில் முக்கிய வேலை இருப்பதாகச் சொல்லி காலையே கிளம்பிவிட்டார். அந்த வெயில் நேரத்தில் பீச்சில் கூட்டம் அவ்வளவாக இல்லை.
``அப்பா ஐஸ் வாங்கிக் குடுப்பா."
``போகும்போது வாங்கித் தர்றேன் செல்லம்."
``போ ப்பா... போகும்போது கடல்ல குளிச்சிருக்க ஜூரம் வரும்னு சொல்லுவ நீ"
8 வயதுக்கு மீறிய சிந்தனையுடன் பதில் கூறினாள்!
ரெண்டு சாக்கோபார் ஐஸ் அடம்பிடித்து வாங்கி ஒன்றை சாப்பிட்டுவிட்டு மற்றொன்றை சாப்பிடாமலே கையில் வைத்துக் கொண்டாள்...
``இப்பவே எதுக்கு ரெண்டு வாங்கின... போகும்போது ஒண்ணு வாங்கி சாப்பிட்டிருக்கலாமே?"
``லூசாப்பா நீ... அதான் அப்பவே சொன்னனே... கடல்ல குளிச்சதுக்கப்புறம் நீ வாங்கித் தரமாட்டே. அதான் இப்பவே வாங்கிட்டேன்"
இடுப்பில் கையை வைத்துக்கொண்டு அழகாகச் சொன்னதை எந்தத் தகப்பனாயிருந்தாலும் ரசித்திருப்பான்!
கடல் நெருங்குவதைக் கடல் அலையின் சத்தம் உணர்த்தியது. எங்கெங்கோ சில தலைகள் மட்டும் தென்பட்டன.
என் கையிலிருந்து ஏதோ விடுபட்டு போனதாக உணர்வு வர என் மகளைத் தேடினேன்! கடல் அலையின் ஆர்ப்பரிப்பு சத்தம் அருகில் கேட்கவே ஆவலில் என் கையை உதறி முன்னால் ஓடிக்கொண்டிருந்தாள்!
``ஹே அம்மு ஓடாதே நில்லு..."
நான் துரத்திக்கொண்டே ஓட ,அவள் நான் பிடித்துவிடுவேனோ என்று என்னைப் பார்த்து சிரித்தபடியே ஓடியவள் கரையில் ஓடி விழுவதற்கும் ராட்சத அலை ஒன்று வந்து அவளை இழுத்துச் செல்வதற்கும் சரியாய் இருந்தது.
சற்றுமுன் என் விரல் பிடித்து நடந்தவள் இப்பொழுது அலைகளின் நடுவே மறைந்துவிட்டாள். அலைகளின் நடுவே ஓடித் தேடினேன்... கதறினேன்... அடுத்தடுத்து வந்த அலைகள் நடுவே புகுந்து விழுந்து எழுந்து நீந்த முடியாமல் மூச்சு முட்டியது. நீண்ட நேர தேடலுக்குப் பின் என் மகளின் குரல்...
``அப்பா..." அவளேதான் கரையில் இருந்து கூப்பிடுகிறாள்!
நீந்தி உள்ளே வரும்போது பட்ட கஷ்டம் கரைக்குத் திரும்பும்போது காணாமல் போயிருந்தது. என் மகள்தான் கரையில் நின்று கூப்பிட்டுக்கொண்டிருந்தாள்.
நான் ஓடிச்சென்று அவளை வாரி அணைத்து முத்தங்களால் என் ஆதங்கத்தைத் தீர்த்துக்கொண்டிருந்த நேரம்... திபுதிபுவென ஒரு கூட்டம் கடலில் இறங்கி நீண்ட தேடலுக்குப் பின் இரண்டு உடல்களைக் கொண்டுவந்து கரையில் போட்டனர்!
``ஐயோ பாவம்" என்று சொல்லிக்கொண்டே அருகில் போய் பார்த்தேன்... சடலங்கள் இரண்டும் அச்சு அசலாய் என்னைப் போலவும், என் மகளைப் போலவுமாய்... மிச்சமிருந்த ஒரு சாக்கோபார் மெல்ல கரைந்து கடலில் கலந்தது... என் மகள் ருசிப்பதற்காக!
- சத்யா சரளா