தென்மோடி நாட்டுக்கூத்தின் புகழ்பெற்ற கலைஞர் சந்தியா பிலிப்பு – அல்லைப்பிட்டி மண்ணின் மறக்க முடியாத கலை ஆளுமை!

தென்மோடி நாட்டுக்கூத்தின் புகழ்பெற்ற கலைஞர் சந்தியா பிலிப்பு – அல்லைப்பிட்டி மண்ணின் மறக்க முடியாத கலை ஆளுமை!

எனது தந்தை வழிப் பேரனாரான சந்தியா பிலிப்பு அவர்கள் குறித்து அமைகிறது இன்றைய பதிவு. சந்தியா பிலிப்பு அவர்கள் 17.07.1924 இல் சந்தியா மற்றும் அனந்தாசி (செல்லம்மா) தம்பதியருக்கு மூத்த புதல்வராக அல்லைப்பிட்டியில் பிறந்தார். சரித்திரகாரன்/ நாடகக்காரன் என்று தென்மோடி நாட்டுக்கூத்தில் அழைக்கப்படும் கதாநாயகன், இறையடியார்கள், வேதசாட்சிகள் முதலிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்த இவர் பொன்னூல் செபமாலை நாட்டுக்கூத்தில் சம்மனசு கதா பாத்திரமேற்று நடித்து தன் கலைப் பயணத்தை பாலப்பருவத்தில்  ஆரம்பித்தார். அன்னாரின் பாலவயதிலே பெற்றோர் காலமாகிவிட பெரிய தாயார் சவிராசி (அன்னம்மா) அவர்களின் கரத்தில் வளர்ந்தார். சிறுவனான பிலிப்புவின் குரல்வளத்தை கண்ணுற்ற புனித பிலிப்பு நேரியார் ஆலய மூப்பர் கபிரியேல் நீக்கிலான் (முத்துவேல்) அவர்கள் அந்நாட்களில் 5சதம் கூத்துக்கான வீதப்பணமாகச் செலுத்தி பொன்னூல் செபமாலை நாட்டுக்கூத்தில் சம்மனசு கதாபாத்திரத்தை பெற்றுக் கொடுத்து அன்னாரின் கூத்துலக வாழ்விற்கு அடிகோலுவித்தார். மூப்பர் நீக்கிலான் (முத்துவேல்) அவர்கள் தமக்குப்புரிந்த உபகாரத்தை தன் வாழ்நாளில் மறவாத இவர் இச்சம்பவத்தை அடிக்கடி தனது பிள்ளைகளிடத்தில் சிலாகித்துள்ளார்.  வரகவியாக விளங்கிய மூப்பர் நீக்கிலான் இயற்றிய பாக்களை இவரும் இவருடைய உடன்பிறவாத சகோதரரான அந்தோனி அவர்களும் பின்னாட்களில் இசைத்தனர்.  பின்னர் விசய மனோகரன் நாட்டுக்கூத்தில் பின் மனோகரன், நொண்டி நாடகத்தில் பின் நொண்டி முதலிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து புகழ் பெற்றவர். "மன்னிய பசுநிரைகள் தன்னையே மேய்க்கும் இந்த மாட்டிடைப் பயல்களென்னும் மோட்டுப் பொடியள்” என்று ஆரம்பிக்கும் நொண்டி நாடகப்பாடல் இவர் குரலில் சோகம் ததும்ப இசைக்கையில் இனிமையானது என்று கூறப்படுகிறது.  இவை தவிர தாமே பாடல் புனைந்து பாடிடவும் ஒப்பாரிகள், வியாகுலப்பிரசங்கம், ஆலய திருச்சொரூபப் பவனிக்கான நடைசாரிப்பாடல்கள் முதலானவற்றை இசைப்பதிலும் வல்லமை பெற்றிருந்தார். ஒருமுறை இவர் கடற்றொழிலில் ஈடுபட்ட வேளையில் கடலிலே தம்மை வலிந்து பாடற் போட்டிக்கழைத்தவரை பாட்டால் வென்று "புலி வேட்டை எலியாடுமோ மின்னி மின்னி பூச்சி பொழுதுக்கு இணையாகுமோ" என்று பாடி நாணுவித்ததாக  கூறப்படுகின்றது. 1990களில் இடம் பெயர்ந்து அரியாலை அகதி முகாமில் வாழ்ந்த காலத்திலும் பண்டாரவன்னியன், திருஞானதீபன் முதலான நாட்டுக்கூத்துக்களில் நடித்துள்ளார். பண்டாரவன்னியன் நாட்டுக்கூத்தில் தூதுவன் கதாபாத்திரத்தை ஏற்று தனது முதுமையிலும் திறமையைக் காண்பித்தார். சடுதியாக எவ்வித பாத்திரங்களை வழங்கினாலும் தன்னைச் சுதாகரித்து நடித்திட வல்ல இவர்,  அண்ணாவியார்களுக்கு துணையாக பயிற்றுவிப்புக்களை மேற்கொண்டவர் என்பது சிறப்பானது.  குறிப்பாக பாசையூரைச் சேர்ந்த அண்ணாவியார் அலெக்சாண்டர் அவர்களுடன் துணைநின்று விசயமனோகரன் நாட்டுக்கூத்தையும் விளானைச் சேர்ந்த அண்ணாவியார் பெஞ்சமின் அவர்களுக்கு துணையாக நொண்டி நாடகத்தையும் பயிற்றுவித்தவர். 1990இல் ஏற்பட்ட தீவக இடப்பெயர்வுகளின் பின்னர் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்திருந்த செபமாலைக்கன்னியர் மடத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்த இவர் தனது அந்திம காலத்தில் முழங்காவிலிலுள்ள அமலமரித்தியாகிகள் சபைக் குருக்களின் “அன்பகம்” இல்லத்தில் பணிபுரிந்து வந்தார். அன்னார் சடுதியாக நிலத்தில் வீழ்ந்து இருநாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 11.02.2007இல் தனது 83 ஆவது வயதில் இறைபதமடைந்தார்.  
எழுத்தாக்கம்:- Antonyfernando Jeniefar