நாட்டுக்கூத்து மரபின் ஆளுமை! நாரந்தனையின் புகழ்பெற்ற அண்ணாவியார் கட்டைச் செல்லையா

நாட்டுக்கூத்து மரபின் ஆளுமை! நாரந்தனையின் புகழ்பெற்ற அண்ணாவியார் கட்டைச் செல்லையா

 ·

நாரந்தனையின் புகழ்பூத்த அண்ணாவியார்களில் குறிப்பிடக் கூடியவர் செல்லையா அண்ணாவியாராவார். அவரது இயற்பெயர் அந்தோனிப்பிள்ளை சந்தியாப்பிள்ளை என்பதாக இருப்பினும் 'கட்டைச் செல்லையா' என்றே அறியப்பட்டு அழைக்கப்பட்டார். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1902இல் பிறந்தார். சகோதரியின் திருமண பந்தத்திற்குப் பின்னர் இளமைப்பருவத்தில் இருந்தே நாரந்தனையில் வாழ்ந்து வந்தார். சிறிய வயதில் இவர் யாரிடம் கூத்துப்பயின்றார் என்பதற்கு தகவல்கள் அறிய முடியாதுள்ளது.

ஆனால் நாரந்தனையில் ஆரம்பத்தில் அண்ணாவியார் சவீனை சந்தியாப்பிள்ளையின் நாடகங்களில் நடித்தார் என்றும் பின்னர் இந்தியாவுக்குச் சென்று கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டதுடன் தவில், நாதஸ்வரம் மிருதங்கம் போன்ற இசைக்கருவிகளும் இசைக்கக்கூடியவராக திரும்பி வந்து நேர்த்தியாக கூத்துக்களையும், விலாசம் போன்றவற்றையும் ஆடிவந்துள்ளார்.

'நாடகக்காரனாகவும்' பெண்பாத்திரங்களையும் (ஸ்திரிபாட்) ஏற்க வல்லவராகிய இவரது சாரீரவளம் மிகவும் உயர்ந்தென்றும் இவர்பாடும் போது ஒலிபெருக்கிகள் இல்லாத காலத்திலேயே மிகவும் தூரத்திற்கப்பால் தம்பாட்டிக் கடற்பரப்பில் இருந்து 'செல்லையாண்ணன் பாடுகிறார்' என கூறுமளவுக்கு அவரது குரல் தூரங்கடந்து கேட்குமென்றும் கூறுவர்.

'நாடகக்காரன்' பாத்திரங்களையும் பெண்பாத்திரங்ளையுமே இவர் அதிகமாக ஏற்றார். 'பளுத்தூக்குதல்' 'சிலம்பு' போன்ற தற்காப்புக்கலைகளில் சிறந்துவிளங்கிய இவர், இறுகிய உடல்வாகு உடையவராக இருந்த காரணத்தினால் எந்த வேடமும் இவருக்குப் பொருந்தும் என்றும் அதிகநேரம் களைக்காமல் நின்று கூத்தாடக் கூடியவராக, மேடையில் சபையைக் கவரத்தக்கவராக இருப்பார் என்றும் கூறப்படுகின்றது.

சம்பேதுரு சம்பாவிலு, சவீனகன்னி, செனகப்பு, உடைபடா முத்திரை, மெஞ்ஞான வர்த்தகன், கருங்குயில் குன்றத்துக் கொலை, எஸ்தாக்கியார், செபமாலைப் பக்தர்கள், தேவசகாயம்பிள்ளை, செபஸ்தியார், ஞானசௌந்தரி, செனபோன், விஜயமனோகரன், மரியதாசன், போன்ற பல கூத்துக்களை நடித்ததுடன் பலவற்றை நெறிப்படுத்தியுமுள்ளார்.

இவரிடம் பயின்ற பலர் பிற்பட்ட காலங்களில் அண்ணாவிமார்களாக மிளிர்ந்தனர். கூத்தின் பாடல்களுக்கு அவர் ஒற்றைக் கைகளாலேயே தாளம் போடும் திறன் அபாரமானது என்று கூறுவார்கள். இவரது பிற்பட்ட காலத்தில் பூந்தான்யோசேப்பு தனது கூத்துக்களுக்கு இவரையே தாளம் போடுவதற்கு அதிகம் பயன்படுத்தியுள்ளார் என்பது மட்டுமின்றி அவரில் அதிக மரியாதையைக் கொண்டிருந்தார்.

நாரந்தனையில் மட்டுமன்றி வசாவிளான், பண்டத்தரிப்பு, மாதகல், சில்லாலை, கோவளம், முகமாலை, தாளையடி, எழுவதீவு....போன்ற பல இடங்களுக்கும் சென்று கூத்துக்களை நெறிப்படுத்தி வந்துள்ளார். பூந்தான் யோசேப்பு அவர்கள் பல அண்ணாவிமார்களை இணைத்து கூத்துக்களை நெறிப்படுத்திய போது இவரையும் இணைத்து சில கூத்துக்களில் நடிக்கவைத்துள்ளார். மூத்தவராகிய இவரில் பூந்தான்யோசேப்பு அதிக மரியாதையைக் கொண்டிருந்தார் எனக்கூறப்படுகின்றது.

ஆரம்பகாலத்தில் இவர் ஆர்மோனிய இசைக்கருவியைப் பயன்படுத்தாது. மத்தளத்துடனேயே கூத்துக்களை நெறிப்படுத்தினார் என்றும் பின்னர் சுதிமரியான் என அழைக்கப்படும். மரியாம்பிள்ளை, ஊர்காவற்றுறையைச் சேர்ந்த திரு உடையார் செல்லத்துரை, என்பவரும் இவரது கூத்துக்களுக்கு ஆர்மோனியம் வாசித்துள்ளனர். இவருடைய கூத்துக்களுக்கு ஊர்காவற்றுறையைச் சேர்ந்த கோடையிடி தம்பாப்பிள்ளை மிருதங்கம் இசைத்துள்ளார்.

இவரது கூத்துக்களில் நடித்த நடிகர்களில் வெலிசோர், சீமான்பிள்ளை, (போக்கர்) சவிரிமுத்து, கண்ணுத்துரை, தம்பு, அருளப்பு, இராயப்பு, செல்லத்துரை. ஜேம்ஸ் அருளம்பலம், சிங்கராஜர் போன்ற பலரைப்பற்றியும் அறியக் கிடக்கின்றது.

ஆயினும் இத்தகவல்கள் முழுமையானவை அல்ல.

ஆனால் நாரந்தனையில் இவரும் சிங்கராஜாவும் மிக நெருங்கிய நண்பர்களாகவும் இருவரும் இணைந்து நடித்தால் சபை களைகட்டும் என்று கூறும் அளவிற்கு வரவேற்கத்தக்க நடிகர்களாகவும் இருவரும் இருந்தனர். சம்பேதுரு சம்பாவிலு நாடகத்தில் இவர் சம்பேதுருவாகவும் சிங்கராஜர் சம்பாவுலுவாகவும் நடிக்கும் போது வெகு சிறப்பாக இருக்கும் என்கின்றனர். கூத்துக்களால் புகழ்பெற்ற இவர்

தனது 61ஆம் வயதில் 1963இல் காலமானார்.

அண்ணாவியார் குறித்த தகவல்கள் முழுமையானவை அல்ல. மேலதிக தரவுகளை வரவேற்கிறோம்.

மூலாதாரங்கள்

அலைமொழி-03 சஞ்சிகைக்கு திருமறைக்கலாமன்றத்தின் பிரதி இயக்குநர் திரு யோ.யோண்சன் ராஜ்குமார் அவர்கள் ஆக்கியளித்த நாரந்தனையும் நாட்டுக்கூத்து மரபும் எனும் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டது.

புகைப்படம் அண்ணாவியாரின் கோட்டுச்சித்திரத்தை செயற்கைநுண்ணறிவுத் தொழினுட்பம் மூலம் மேம்படுத்திப் பெற்றது.
எழுத்தாக்கம்:-Antonyfernando Jeniefar