நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்

நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்

இலங்கையில் பொலிஸ் கடமையின்போது வழங்கப்பட்ட ரி-56 ரக துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் ஒப்படைத்துவிட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், இரண்டு வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம், பேமடுவ, ஹெலம்பகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஜயகொடி ஆராச்சிகே கவிந்து ஆகாஷ் ஜயகொடி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கல்கிசை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியவராவார்.

கடந்த 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பொலிஸ் வீதித் தடையில் கடமையாற்றிக் கொண்டிருந்தபோது, தனது கடமைக்காக வழங்கப்பட்ட ரி-56 ரக துப்பாக்கியை பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடைய ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு டுபாய்க்குத் தப்பிச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் (Interpol) ஊடாக சிவப்பு அறிவித்தல் (Red Notice) பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி டுபாய் விமான நிலையத்திற்கு வந்திருந்த சந்தர்ப்பத்தில் அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட அவர், இன்று (26) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

ஆரம்பகட்ட விசாரணைகளின்போது, டுபாயில் வீடமைப்புத் தொகுதி ஒன்றை விலைக்கு வாங்கி அதனைப் பல பகுதிகளாகப் பிரித்து வாடகைக்கு வழங்கியதாகவும், அங்குள்ள உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் பகுதிநேரமாகப் பணியாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், பொலிஸ் கடமைக்காக வழங்கப்பட்ட துப்பாக்கி தொடர்பில் இதுவரை முழுமையான தகவல்களை அவர் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.