அல்லைப்பிட்டியின் புகழ்பெற்ற கூத்துக்கலைஞர் “கட்டை அந்தோனி” – மறக்க முடியாத கலைப்பயணம்!
பேதுரு அந்தோனி/ பர்னாந்து அவர்கள் 1919 இல் பேதுரு (இளையவர்) சவிராசி (அன்னம்மா) தம்பதியினரின் மைந்தராக அல்லைப்பிட்டியில் அவதரித்தார். தோற்றத்தில் உயரம் குறைவானவர் என்பதால் ஆட்குறிப்பறியும் பொருட்டு "கட்டை அந்தோனி" என ஊர் மக்களால் அழைக்கப்பட்டார். பிலிப்பு அவர்களின் உடன்பிறவா சகோதரரான. (அண்ணா) இவர் பிலிப்பு அவர்களுடன் இணைந்து நடித்துப்புகழ் பெற்ற நாடகக்காரன் நடிகராவார். தாய் தந்தையரின் மறைவுக்குப்பின் பிலிப்பு அவர்களும் அவருடைய இரு சகோதரர்களான கிறிஸ்ரி மற்றும் மரிசலீன் ஆகியோர் இவருடைய தாயின் அரவணைப்பில் வளர்ந்ததால் இயல்பிலேயே பிலிப்பு அவர்கள் மீது அதீத அன்பு பாராட்டி வந்தார். அன்னாரின் தந்தையான பேதுறு (இளையர்) அவர்களும் கூத்துக்கலைஞர் என்பதோடு முதன்முறை அல்லைப்பிட்டியில் விசயமனோகரன் மேடையேறிய நாட்டுக்கூத்தில் சாம்புவன் பாத்திரமேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தையின் அடியொற்றி கூத்துக்கலையில் கால்பதித்த அந்தோனி அவர்கள் விசய மனோகரன் நாட்டுக்கூத்தில் பின் விசயன் கதாபாத்திரமேற்று நடித்து புகழ் பெற்றதோடு தம் சோகத்தருக்களால் சுவைஞர்களை அழவைத்த பெருமைக்குரியவர். பிலிப்பு அவர்களுக்கு சரிநிகரானவராகவும் பல பணிகளில் பக்கதுணையாகவும் விளங்கியுள்ளார். தருணத்திற்கேற்ப பாக்கள் இயற்றி இசைக்கும் வன்மை பெற்றவர் இவர்.
ஒருமுறை இவருக்கு பனங்கிழங்கை சாப்பிடக் கொடுத்தபோது "வாய்ப்புடன் முன்னே பிடுங்கி சாப்பிடாததார் கிழங்கை ஆப்பினாற் கிழிக்கும் பனை ஆனதறிவீரே” என்று நகைத்துப்பாடியதாக கூறுகின்றனர்.
அக்காலத்தில் பெருவழக்காக நிலவிய கூத்துப்போட்டிப் பாடல்களில் பலரின் கொட்டமடக்கிய வீரரான இவர் கூத்தின் நுண்மான்நுழைபுலங்களை அறிந்தவராக விளங்கினார். சிறுவனாக இவருக்கு நெருக்கமானவனாக சிறுஉதவிகள் புரிந்தபோதும் இவரது புலமையை அறியும் அறிவுமுதிர்ச்சி எனக்கிருக்காததும் நாம் தெளிவுற்ற போது அவரில்லாமையும் வேதனையானதே.
2006 இல் அல்லைப்பிட்டியிலிருந்து இடம்பெயர்ந்து நாவாந்துறை நலன்புரி நிலையத்தில் வசித்துவந்த வேளை 31.01.2007 இல் தனது 88ஆவது வயதில் இயற்கை எய்தினார். அன்னாரின் பூதவுடல் அப்போதைய நிலைகளைக் கருத்திற்கொண்டும் அல்லைப்பிட்டிக்கு வரமுடியாத அசாதாரண நிலைமையாலும் நாவாந்துறை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
எழுத்தாக்கம்:- Antonyfernando Jeniefar