வெள்ளைக்கொடியை ஏந்தி மக்களைக் காக்கச் சென்றவர்… 20 ஆண்டுகளாகியும் மறையாத அருட்பணி ஜிம்பிறவுண் அடிகளாரின் தியாகம்

வெள்ளைக்கொடியை ஏந்தி மக்களைக் காக்கச் சென்றவர்… 20 ஆண்டுகளாகியும் மறையாத அருட்பணி ஜிம்பிறவுண் அடிகளாரின் தியாகம்

அருட்பணி திருச்செல்வம்  நிகால்  ஜிம்பிறவுண் அடிகளாரும் வென்சஸ்லாஸ்  வின்சன் விமலதாஸ் (விமலன்) அவர்களும் காணாமலாக்கப்பட்டு இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைகின்றன. காலங்கள் கடந்தாலும் கண்ணினின்று காட்சிகள் அகலவில்லை. 
(15ஆம் ஆண்டு நிறைவில் எழுதிய அனுபவத்தை மீள காலமாற்றத்துடன் பதிகின்றேன்.)
13 ஆவணி 2006
இஸ்ரயேலர் மோசேயின் பின்னால் அணிதிரண்டு செங்கடலை கடக்க முயன்றது போல அல்லைப்பிட்டி மக்கள் புதிய மோசேயான அருட்பணி ஜிம்பிறவுண் அடிகளாரைத் தொடர்ந்து வெள்ளைக்கொடியை கரமேந்தி காயப்பட்டவர்களை தோள்களிலே தாங்கியபடி குருதியில் ஆடைகள் தோய உடுத்த உடைகளோடு எம் பங்குத்தந்தை  எம்மோடு நடக்கிறார் என்ற நம்பிக்கையை தவிர வேறேதுமற்றவர்களாக அல்லைப்பிட்டி சந்தியை நோக்கி  நடந்து
கொண்டிருந்தார்கள். 
நானும் அக்கூட்டத்தில்  7 வயது சிறுவனாக தலையில் காயத்துடன்  உருட்டி வரப்பட்ட ஒரு துவிச்சக்கர வண்டியில் அமரவைக்கப்பட்டிருந்தேன்.  என் சகாக்கள் சிலரை எனக்கு முன் தூக்கிச்செல்கின்றனர். இரத்த ரணமாக அவர்களில் ஒருவரின் காற்பாதம் பொருத்து விட்டு அந்தரத்தில் நின்றாடுகிறது. 
13 வைகாசி 2006 நடைபெற்ற 09 அப்பாவிகளின்  படுகொலையைத் தொடர்ந்து இடம்பெயர்ந்து அநேகர் வன்னியை நாட எஞ்சியோர் ஆவணி முற்பகுதியில் ஊருக்கு வந்து குடியேறியிருந்தனர். பாதுகாவலர் புனித பிலிப்நேரியாரின் திருநாளை வைகாசியில் தவற விட்டுவிட்டோம். அதனை  சிறிய அளவிலேனும்  கொண்டாடவேண்டும் என்று தீர்மானித்து 11ஆவணி 2006 கொடியேற்றி அன்றைய தின திருப்பலி நிறைவுற்று புதிதாக நிறுவப்பட்ட புனித பிலிப்பு நேரியாரின் திருச் சொரூபத்தை அருட்பணி ஜிம்பிறவுண் அடிகளார் ஆசீர்வதித்து திறந்து வைக்க திருச்சொரூபத்தை  தொட்டு மன்றாடி வீடு வந்து சேர்ந்தோம். அன்றிரவு ஏறத்தாள 9.00-9.30 மணி இருக்கும். வீட்டில் அப்பாவும் அம்மாவும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். நான் உறங்கிக் கொண்டிருந்தேன். திடீரென இடியோலி கேட்டு எழுந்தேன்.அது இடியொலி  அல்ல  வெடியொலி.  "செல்லடிக்கிறாங்கள் கெதியா பொட்டுப்பிரிச்சு இஞ்சால வா" என்றார் அயல்வீட்டு அற்புதம் மாமா. சாப்பிட்டவர்கள் கைகளை கழுவினார்கள். அப்பா  என்னை தூக்கி தோளில் போட்டபடி மாமாவின் வேலியில் நாலுமட்டைகளை பிரித்து பொட்டுக்குள்ளாற் புகுந்து மாமாவின் வீட்டிற்குச்சென்றோம். அப்போது எங்கள் வீடு ஒருவரி கல்வைத்துக்கட்டி மட்டையால் வரிந்து கிடுகால் வேய்ந்த ஓலைவீடு. மாமாவின் வீடு கல்வீடு. ஒரே செல்லடி. கோடை மின்னல் போல் பளீரெனும் ஒளி. உறங்க முயன்றோம் பலனில்லை.
திடீரென பெரிய வெடியொலி செல்லொன்று பெரியப்பாவின்  மாமரத்திற்கு சற்றுத்தள்ளி விழுந்து கிணறு தோண்டியிருந்தது. அதிலிருந்து பறந்த சன்னமொன்று மாமாவின் வீட்டு விறாந்தையின் சுவரை துளைத்துவிட்டது. ஒருவருக்கும் ஒன்றுமாகவில்லை. இரவிரவாக இதேதான்.
அடுத்தநாள் விடிந்தது ஆலயத்திற்கு ஓடினோம். "செபமாலை சொல்லுவோம்" அருட்பணி ஜிம்பிறவுண் அடிகளாரோடு சேர்ந்து அறைவீட்டில் செபமாலை செபித்தோம். மதியம் சிலர் வீடுகளுக்கு சென்று சமைத்தார்கள். சிலர் ஆலய வளாகத்திற் சமைத்து உண்டபின் இரவு 8.30 மணியளவில் அழுகுரல் மரண ஓலம். வீடொன்றில் தஞ்சமடைந்த வேளை வீட்டின் மேல் வீழ்ந்த செல் அங்கிருந்தோரை காவுகொண்டது. இறந்தோர் தவிர ஏனையோரின் அழுகுரல் ஆலயத்தை நிறைத்தது. செல்லடியை மீறி ஒலித்தது. மக்களால் நிறைந்த ஆலயத்தில் பீடத்தை அடுத்து பின்புறமாயுள்ள பகுதியில் சிலுவையில் அறையப்பட்ட யேசுநாதரின்  பாதத்தடியில் அவரது காலைப்பார்த்தபடி உடல் வியர்த்தொழுக பயத்தால் போர்வையை விலக்கமனமின்றி உயிர்காக்கும் கவசம்தான் போர்வையெனும் எண்ணமேலீட்டில் கிடந்தேன். கல்லறை ஆண்டவர் புத்தகம்தான் கதி. ஏறத்தாள விடியற்காலை 5 மணியிருக்கும் உறக்கம் கலைந்தது.  தலை முழுதும் மக்கிக்குவியல். விடிகாலையில் ஆலயத்தின் மீது விழுந்த செல் ஆலயத்தில் தன் பலத்தை பரிசோதித்திருந்தது.  முருகைக்கல்லும் சுண்ணாம்பு சர்க்கரை கலந்து  எங்கள் மூதாதையர் கட்டிய கோவிலென்று என்றோ என் அப்பம்மா சொல்லக்கேள்வி. விழுந்த செல் பட்டு உடைந்த போது நொறுங்கி விழுந்த மக்கி மணல் ஆலயத்தை புகைமண்டலமாக்கியிருந்தது. உயிர் காக்கப்பட்டோம். கொங்கிறீட் கற்களென்றால் பிணக்குவியல் தான். மேலே கூரையை காணவில்லை. யேசுநாதர் ; அவர் கைகளை விரித்தபடி இருந்தார். தந்தையின் தலையிலிருந்து இரத்தம் வழிந்தது. எனக்கும் தலையிற் காயம் .மக்கிமண் புண்ணிலிருந்து இரத்தம் வெளியேறாத படி ஒட்டியிருந்தது. ஒவ்வொருவராக மீட்டு படுகாயமடைந்தோரை மணலில் வளர்த்தினார்கள். பொழுது புலர்ந்தது ஆறுமணியிருக்கும் "இப்பிடியே நிண்டால் சரிவராது ஏலுமானாக்கள் வாங்கோ , காயப்பட்டவய ஜச்சோட வந்து கொண்டு போவம்"  என்று கூறி வெள்ளைத்துணியை உயர்த்திப்பிடித்தவாறு அருட்பணி ஜிம்பிறவுண் அடிகளாரின் தலைமையில் ஆரம்பித்தது அப்பயணம். வரும்வழியில் மாமாவின் வீடு செல்லடிக்கு இலக்காகி பாரிய சேதத்திற்குள்ளாகியிருந்ததைக் கண்டோம். இறைவன் நம்மை அங்கிருந்து எழுப்பி தன் பாதத்தில் இடமளித்தது இதற்காகத்தான் என்பது நன்றாகப்புரிந்தது. இராணுவத்தினர் துப்பாக்கி முனையை நீண்டியவாறு நிற்கிறார்கள். எல்லோரும் கைகளை உயர்த்தினார்கள். ஏனென்று தெரியாமல் நானும் உயர்த்தினேன். சரணடைதலாம் அது. 
யாழ்ப்பாணத்திற்கு செல்ல விடமுயாதென்று அவர்கள் கூற இயலாக்கட்டத்தில் அருட்பணி ஜிம்பிறவுண் அவர்கள் முழந்தாள்படியிட்டு அந்த இராணுவ வீரரை மண்டியிட்டு "என் மக்களை போகவிடுங்கள்" என்று வேண்டினார். கல்லுக்குள் ஈரம் என்பது போல யாழ்ப்பாணம் போக விடமாட்டோம் என்றவர்கள்  ஊர்காவற்றுறைக்கு செல்ல அனுமதித்தனர். நம்மை மீட்டு பக்குவமாக ஊர்காவற்றுறை கொணர்ந்து சேர்த்தார். ஊர்காவற்றுறை வைத்தியசாலை அவ்வேளை காயப்பட்டோருக்கு தகுந்த மருந்தளிக்கும் நிலையிலிருக்கவில்லை. போரின் பொருளாதார தட்டுப்பாடுகள் அங்கும் புலனாயின.ஆயினும் கையிருப்பிலிருந்த மருந்துகளை வழங்கி தம் கவனிப்பால் ஆறுதலளித்தனர். உடுத்த உடையுடன் சென்ற எமக்கு உடையளித்து உணவளித்து கனிவுடன் கவனித்த என் உறவுகளுக்கு நன்றிகூற  வார்த்தைகள் இல்லை.  
மருந்து நெருக்கடியினால் அப்பாவை ஏற்கனவே யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டனர். இரண்டுநாட்கழித்து என்னையும் அம்மாவையும் அனுப்பி வைக்க யாழ் போதனா வைத்தியசாலையின் 16இலக்க விடுதி நம் கதியானது.
21 ஆவணி 2006
பங்குத்தந்தைக்கு சமையற்பணி புரிந்த பெர்னடேத் அம்மம்மா விடுதிக்கு வந்தார். என் அம்மாவை அழைத்தார்." ரீச்சர் விமலனும் பாதறும் நேற்று மண்டைதீவுக்கு போய்ற்று அல்லைப்பிட்டிக்கு போனவயாம். போனவ ரெண்டு பேரயும் காணேல்லயாம்" . "பாதற காணேல்லயாம்".. பாதற காணேல்லயாம்". எல்லோர் வாய்களும் முணுமுணுத்தன. 
இன்றோடு ஆண்டுகள் 20 ஆகிவிட்டன.  பாதற காணேல்லயாம் என்பது மறைந்து "பாதற காணேல்லை" என்றானது.
அருட்பணி ஜிம்பிறவுண் அடிகளார் தான் யேசுவின் ஊழியன் என்பதை நிருபித்துவிட்டார். செங்கடல் பயணத்தில் மோசே இஸ்ரயேலரை வழிநடத்தியது போன்று அவரது தியாகம் அல்லைப்பிட்டி மக்களை மீட்டது. அவர் புதிய மோசே; ஆம் அவர் எனக்கு மோசே.
என் நெஞ்சே உனக்காக தன்னை கொடுத்த உன்னத குருவானவரின்  தியாகத்தினால்தான் நீ வாழ்கிறாய் என்பதை உன் தலைமுறையினருக்கும் சொல்லிக்கொடுக்க மறவாதிருப்பாயாக.

எழுத்தாக்கம்:- Antonyfernando Jeniefar