காவலூரின் கவித்துவச் செல்வம் – ஞா.ம. செல்வராசா

காவலூரின் கவித்துவச் செல்வம் – ஞா.ம. செல்வராசா

காவலூர்க்கவிஞர் ஞா.ம. செல்வராசா அவர்கள் ஊர்காவற்றுறையின் உதயதிசையில் 1914இல் ஞானப்பிரகாசம் மற்றும் மரிய மாணிக்கம் தம்பதியரின் அருமைப் புதல்வராகப் பிறந்தார். அக்காலத்தில் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியில் கல்விப்பணியாற்றிய புனித சூசையப்பர் சபைத்துறவிகளிடம் கற்றுத்தேர்ந்தார். சிறப்பாக நற்றமிழ் விற்பனராம் அருட்சகோதரர் சைமன் அவர்களிடம் கற்ற தமிழையே தன் வாழ்வின் ஆதாரமாகக் கொண்டிருந்தார். அவரிடம் தெள்ளுதமிழ்

யாப்பிலக்கணங்களைக் கற்றுத்தேர்ந்து மரபுவழித்தமிழ்க் கவிதைகளில் கை தேர்ந்தார்.

இவர் வீரகேசரி,தினகரன், சுதந்திரன் முதலிய பத்திரிகைகளில் பணியாற்றியவர். அக்காலத்தில் அவர் யாத்த கவிதைகள் பலராலும் போற்றப்பட்டன. 1947இல் மகாத்மா காந்தி அவர்கள் கொல்லப்பட்ட போது அவருக்கு அஞ்சலிக் கவிதையொன்றை எழுதினார். அக்கவிதை தினகரன் பத்திரிகையில் பிரசுரம் கண்டு பெரும் வரவேற்பைப்பெற்றது.

இவர் எழுதிய நூல்களில் "சிந்தாகுல மாலை" எனும் நூலே முதன்முதலில் இயற்றியதாகும். கத்தோலிக்க மறையை இவர் பின்பற்றிய போதும் சைவசமயப் பக்திப்பாக்களையும் இவர் இயற்றியுள்ளமை சிறப்பானது.

தமிழரின் பாரம்பரிய நாடக வடிவமான நாட்டுக்கூத்துக்களை ஆக்கி நாட்டுக்கூத்துக்கலை வளர்ச்சிக்கு உதவினார். அந்த வரிசையில் ஞானசவுந்தரி, பண்டாரவன்னியன், புனித அந்தோனியார், வேளாங்கண்ணி மாதா நாடகம், புனித செபஸ்தியார், புனித யாகப்பர் -1ஆம் பாகம், புனித யாகப்பர் -2ஆம் பாகம், ஏழைபடும்பாடு, தர்ம பிரகாசன் , ராஜராஜ சோழன் முதலான நாட்டுக்கூத்துக்களை ஆக்கியளித்தார்.

கவிஞரின் ஞானசவுந்தரி நாட்டுக்கூத்து ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டி 1972இல் கல்லூரியின் பழைய மாணவர்களால் மேடையேற்றப்பட்டது. அக்கூத்தின் சிறப்பால் இலங்கையின் பலபாகங்களிலும் மேடையேற்றம் கண்டது. சிறப்பாக ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி வளாகம், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபம், கொழும்பு டவர் மண்டபம், நீர்கொழும்பு நகரசபை மண்டபம் என்பன குறிப்பிடத்தக்கவை. பொன்னின் குடத்திற்குப் பொட்டிட்டாற் போல் இக்கூத்தில் பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராஜன் அவர்களும் பாத்திரமேற்றிருந்தமை சிறப்பானது.

1975இல் புனித செபஸ்தியார் நாட்டுக்கூத்து கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலய வளாகத்தில் அரங்கேறியது. அக்கூத்தில் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி முதல்வர் இரட்ணராஜா அவர்கள் செபஸ்தியார் பாத்திரமேற்றமை குறிப்பிடத்தக்கது.

பண்டாரவன்னியன் நாட்டுக்கூத்து 1975இல் காவலூர் புனித அந்தோனியார் கல்லூரி பழையமாணவர்சங்க தென்னிலங்கைக் கிளையினரின் படைப்பாக அரங்கேறியது.

புனித யாகப்பர் 1ஆம் பாகம் ஊர்காவற்றுறை புனித யாகப்பர் ஆலய வளாகத்தில் 1980ஆம் ஆண்டு மேடையேற்றப்பட்டது. இக்கூத்து புனித யாகப்பரின் வாழ்க்கைச்சரிதையில் அவரை இயேசு அழைத்தது முதல் அவருடைய மரணம் வரை உள்ளடக்கியது.

புனித யாகப்பர் 2ஆம் பாகம் புனித யாகப்பரின் உடல் கொம்பொஸ்தலா நகரில் அடக்கப்பட்டது முதல் றெம்மில் மன்னரை காத்தது முதலான புதுமைகளை உள்ளடக்கியது. 1983ஆம் ஆண்டு யூலை 25 திருவிழைவையொட்டி மேடையேற்ற ஏற்பாடான நிலையில் யூலைக் கலவரத்தினால் தமிழர்கள் பட்ட துன்பத்தாலும் நாட்டிலேற்பட்ட பாதுகாப்பின்மை காரணமாகவும் இக்கூத்து மேடையேற்ற முடியாது நிறுத்தப்பட்டது.

புனித செபஸ்தியார் நாட்டுக்கூத்து புனித செபஸ்தியார் ஆலயத்திலும் அன்னை வேளாங்கண்ணி நாட்டுக்கூத்து கரம்பொன் வேளாங்கண்ணி சிற்றாலய முன்றிலிலும் மேடையேற்றம் கண்டன. மேற்கண்ட நாட்டுக்கூத்துக்களை நாரந்தனையைச் சேர்ந்த அமிர்தகான அண்ணாவியார் அருளப்பு அவர்கள் பயிற்றுவித்தார்.

ஏழைபடும்பாடு மற்றும் தர்மப்பிரகாசன் முதலான கூத்துக்களை நாரந்தனை மேற்கு கலைஞர்கள் அரங்கேற்றினர். மேற்குறித்த கூத்துக்களில் ஞானசவுந்தரி மற்றும் பண்டாரவன்னியன் தவிர பிறகூத்துக்களின் பிரதிகள் இன்று கிடைத்தில. அவற்றின் பிரதிகளோ பாடல்களோ தெரிந்தால் அவற்றை பெற்றிட ஆவலாயுள்ளோம்.

கவிஞரின் எளிய நடைக்குச் சான்றாக

"சீரிய றோமையாள் மன்னவன்- தர்மச்

செம்மலென்றோதிடும் தென்னவன்

பாரினின் மீதிலே வருகின்றார் - வந்து

பாருங்கள் அவரன்பு தருகின்றார் "

என்ற ஞானசவுந்தரி நாட்டுக்கூத்துப் பாடலை கூறலாம்.

மேலும்

தன்கூத்துக்களை பயிற்றுவித்த அண்ணாவியார் அருளப்பு அவர்களை காலம் நினைவுகூரத்தக்க வகையில்

பண்டாரவன்னியன் கூத்தில் காக்கைவன்னியன் கொச்சகத்தருவில்

"வாரியணைத்திட நாரியே ஓடி நீ வந்திடு- உந்தன்

வட்டவடிவுதனை தொட்டுச் சுவைத்திடத் தந்திடு

பாரிலுனை மணக்காவிடில் போகுமென்னாவியே- இந்தப்

பாத்திரம் ஏற்றிடச் சொன்னார் அருளப் பண்ணாவியே!" எனப் பாடியிருப்பதும் அவர்தம் ஆற்றலே.

கவிஞரின் இறுதிக்காலத்தில் இயற்றப்பட்ட "பனை அரசன்" நாட்டுக்கூத்து பனை மரத்தை மையமாகக் கொண்டு ஆக்கப்பட்டது. இப்பிரதி யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட பனை அபிவிருத்திச்சபையிடம் ஒப்படைக்கப்பட்டதெனினும் அதற்கு யாது நேர்ந்தது என்பது தெரியாது.

மேற்குறித்த கூத்து நூல்களுடன்

சதா சகாய மாதா சரித்திரம்,

சதா சகாய மாதா பெரிய பிரார்த்தனை ,

யாழ்ப்பாணம் புதுமை மாதா கோயில் சரித்திர வரலாறு,

பாலைதீவு புனித அந்தோனியார் கோயில் சரித்திர வரலாறு,

சரவணை சின்னமடுமாதா ஆலய வரலாறு,

வடநாரந்தனை ஸ்ரீமனோன்மணியம்மாள்பேரில் பதிகம்,

வடநாரந்தனை ஸ்ரீமனோன்மணியம்மாள் திரு ஊஞ்சல்,

நயினைத் தபால் - நயினை நாகேஸ்வரிபேரில்,

நாகதூதம் - நயினை நாகேஸ்வரிபேரில் ,

நயினை பொற்றேர்க் கீர்த்தனை நயினை நாகேஸ்வரிபேரில்,

காந்தி அண்ணன் அம்மானை,

நேருஜி அனுதாபக்கீதம்,

திருமலை யாத்திரைச் சிந்து,

காந்தி அண்ணல் கீதம்,

குழுறும் நெஞ்சம்,

சன்னதியான் கும்மி,

நல்லூர்க் கந்தன் கீர்த்தனை ,

தமிழன் கீதம்,

வடஈழ மறவர் மான்மியம் ,

மேலைக்கரம்பொன் ஸ்ரீ முருகன் பேரில்பதிகம் ,

மருதமடுத் திருப்பதியின் உண்மை வரலாறு

முதலான நூல்களை ஆக்கித் தமிழன்னைக்கு ஆரம் சூட்டியுள்ளார்.

இவரது கவித்துவத்தைப்பாராட்டி பேராசிரியர் சு.வித்தியானந்தன், மற்றும் பேரருட்தந்தை தீயோகுப்பிள்ளை ஆண்டகை முதலான தமிழார்வலர்கள் பொன்னாடை போர்த்து பொற்கிழி வழங்கி கௌரவித்துள்ளர்.

தமிழுக்கு தொண்டாற்றிய இவர் தனது 73ஆம் வயதில் 17.06.1987இல் இறையடி ஏகினார்.

அன்னார் இயற்றிய ஞானசவுந்தரி நாட்டுக்கூத்தில் இடம்பெறும் ஞானசவுந்தரி தேவாரம் எனும் பகுதி 2002இல் அறிமுகமான தரம் -7 தமிழ்மொழியும் இலக்கியமும் நூலில் பல்சுவைப்பாடல்கள் எனும் பகுதியில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலங்கள்

Historical record of kayts island

1999இல் வாழ்ந்துகொண்டிருக்கும் இசைநாடக கூத்து மூத்த கலைஞர் வரலாறு

ஞானசவுந்தரி நாட்டுக்கூத்து

பண்டாரவன்னியன் நாட்டுக்கூத்து

தரம் -7 தமிழ்மொழியும் இலக்கியமும்

பின்னிணைப்பாக ஞானசவுந்தரி நாட்டுக்கூத்திலிருந்து பதிகை செய்த சிலபாக்களை கீழுள்ள இணைப்பில் காணுங்கள்.

https://youtu.be/nSElBB0zlBw?si=eNFl7Yhv-ACa0Idt

எழுத்தாக்கம்:- Antonyfernando Jeniefar