இலங்கைக்கு முதன்முறையாக ரூபாயில் கடன் வழங்கும் உலக வங்கி! 10 ஆண்டுகால கடன் வசதி – புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்கு முக்கிய வாய்ப்பு!
இலங்கையில் முதன்முறையாக இலங்கை ரூபாயில் கடன் நிதி வசதியை ஏற்படுத்துவதற்கு உலக வங்கிக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் மூலம் இலங்கை நிறுவனங்கள் வெளிநாட்டு நாணய மாற்று வீத ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் நிதி அபாயங்களைக் குறைத்து, நீண்டகால நிதியுதவியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கிக் குழுவின் ஒரு அங்கமான சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் (IFC), HSBC இலங்கையுடன் இணைந்து இந்த புதிய நிதி வசதியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கமைய, ஆறு ஆண்டுகால நிலையான வட்டி அடிப்படையிலான இலங்கை ரூபாய் கடன் பெறும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமானதாகும்.
இந்த நிதி வசதியின் ஊடாக, இலங்கையின் முன்னணி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றுக்கு 10 ஆண்டுகால அடிப்படையில் 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ரூபாய் கடனை வழங்குவதற்கும் ஆதரவு கிடைத்துள்ளது.
இந்த முதலீடு சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்திற்கு பல்வேறு வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
-
இலங்கையில் இதுவரை வழங்கியவற்றில் மிக நீண்ட கால ரூபாய் கடன் இதுவாகும்.
-
ரூபாயில் வழங்கப்படும் முதலாவது உட்கட்டமைப்புக் கடனாகும்.
-
இலங்கையின் அண்மைய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் முதலாவது உட்கட்டமைப்பு முதலீடாகும்.
இலங்கை ரூபாயில் நிதியைத் திரட்டுவதன் மூலம், நிறுவனங்கள் தமது வருமானத்தைப் பெறும் அதே நாணயத்தில் கடனைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதனால் டொலர் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களின் மாற்று வீத ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க முடியும் என உலக வங்கிக் குழு தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கையில் நீண்டகால உள்ளூர் நாணய நிதியுதவியை விரிவுபடுத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்புத் துறைகளில் தனியார் முதலீடுகளை அதிகரிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த புதிய நிதி வசதி இலங்கையின் தனியார் துறை முதலீடுகளுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது