முன்கூட்டியே வெளியாகும் ஐபோன் 13 சீரிஸ்?

முன்கூட்டியே வெளியாகும் ஐபோன் 13 சீரிஸ்?

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் வெளியீடு பற்றி புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

 

கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. முந்தைய ஆண்டுகளில் செப்டம்பர் மாதத்திலேயே புது ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வந்தன. அந்த வரிசையில், இந்த ஆண்டு புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் செப்டம்பர் மாதத்திலேயே அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

 

 

2021 ஐபோன் சீரிஸ், கடந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்த ஐபோன் 12 சீரிசின் மேம்பட்ட மாடல்கள் ஆகும். இவை சிறிய டிஸ்ப்ளே நாட்ச், சிறப்பான அல்ட்ரா வைடு கேமராக்கள், அதிக ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என இதுவரை வெளியாகி இருக்கும் பெரும்பாலான தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன. எனினும், இதுபற்றி ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 

 

 ஐபோன் 12 மினி

 

கடந்த ஆண்டு வினியோக பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஐபோன் 12 வெளியீட்டு நிகழ்வே அக்டோபர் மாதத்தில் தான் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 மாடல்கள் அக்டோபர் மாத இறுதியிலும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 12 மினி மாடல்கள் நவம்பர் மாத வாக்கில் விற்பனைக்கு வந்தன. 

 

இந்த ஆண்டு துவக்கம் முதலே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தங்களின் பிளாக்ஷிப் மாடல்களை வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே அறிமுகம் செய்து வருகின்றன. சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ், ரோக் போன் 5, ஒன்பிளஸ் 9 சீரிஸ் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கின்றன. அந்த வகையில், இந்த பட்டியலில் ஆப்பிள் நிறுவனமும் இணையலாம் என தெரிகிறது.