பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு! துபாய்க்கான அனைத்து விமானங்களையும் இரத்து செய்த எமிரேட்ஸ்
எமிரேட்ஸ் விமான நிறுவனம் துபாய்க்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களையும் தற்காலிகமாக இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் சர்வதேச விமான நிலையம், அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் 2 வாரங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதற்கு வலுவான பதிலடி கொடுத்து வரும் ஈரான், அமெரிக்காவின் படைத்தளங்கள் உள்ள அரபு நாடுகளிலும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

பாரசீக வளைகுடாவில் உள்ள ஹார்மூஸ் ஜலசந்தியை மூடியிருக்கும் ஈரான், அந்த வழியாக செல்லும் சர்வதேச நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் உள்ளிட்ட வணிகக் கப்பல்களையும் தாக்கி வருகின்றது.
இதற்கிடையில், துபாய் விமான நிலையம் அருகே உள்ள எண்ணெய் கிடங்கு மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலில் எண்ணெய் கிடங்கு பற்றி எரிந்து வருவதன் காரணமாக விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த எண்ணெய் கிடங்கு தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் தங்கள் விமானங்கள் குறித்த சமீபத்திய தகவல்களுக்கு தொடர்புடைய விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.