கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபருக்கு ரெம்டெசிவிர் மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 74) மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, ராணுவ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. டிரம்ப் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு அளிப்பதாகவும், எனினும் அடுத்த 48 மணி நேரம் மிகவும் முக்கியமானது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
டிரம்புக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து வெள்ளை மாளிகை டாக்டர் சீன பி.கோன்லே கூறுகையில், ‘டிரம்ப் நலமுடன் இருக்கிறார். அவருக்கு துணை ஆக்சிஜன் எதுவும் தேவைப்படவில்லை. கொரோனா வைரசை கட்டுப்படுத்த ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அவரது இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள’ என்றார்.
கொரோனா சிகிச்சைக்காக பல்வேறு நாடுகளில் ரெம்டெசிவிர் மருந்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய இந்த மருந்து உதவியது பரிசோதனையில் கண்டறியப்பட்டதால் இந்த மருந்தை பரவலாக பயன்படுத்துவதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கடந்த மே 1ம் தேதி அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.