மெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - 11 பேர் பலி

மெக்சிகோவில் மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 பெண்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.


மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியில் உள்ள குவானாஜுவாடோ மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் ஆதிக்கம் மிகுந்து காணப்படுகிறது. தொழில் போட்டி காரணமாக போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்தநிலையில் அந்த மாகாணத்தில் ஜரல் டெல் புரோகிரெசோ நகரில் உள்ள ஒரு மதுபான விடுதியில் நேற்று காலை பெண்கள் உள்பட ஏராளமான இளைஞர்கள் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது கார்களில் வந்து இறங்கிய மர்ம கும்பல் மதுபான விடுதிக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது.

மதுபான விடுதிக்குள் இருந்தவர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனாலும் அந்த மர்ம கும்பல் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பெண்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.