கல்வி அமைச்சுக்கு முன்பாக நாளை முதல் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம்

கல்வி அமைச்சுக்கு முன்பாக நாளை முதல் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம்

புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெறுமாறு வலியுறுத்தியும், அதற்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும் நாளை (12.01.2026) முதல் கல்வி அமைச்சுக்கு முன்னால் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. இந்தச் சீர்திருத்தங்களுக்கான பாடநெறித் தொகுப்புகளில், ஆபாச இணையதளங்கள் மற்றும் ஆபாச யூடியூப் சேனல்களுக்கான இணைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை மிகவும் அதிர்ச்சியளிக்கின்றது.

இது தொழிநுட்பக் கருவிகளின் பயன்பாட்டை அதிகரித்து, அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் ஒரு பாரிய வர்த்தகச் சதி. பாடநெறி தொகுப்பில் இவ்வாறான இணையதளங்களைச் சேர்ப்பதன் மூலம், இலட்சக்கணக்கான மாணவர்கள் அவற்றை அணுக நேரிடும். இதன் மூலம் ஈட்டப்படும் பாரிய அளவிலான பணம் யாருடைய கைகளுக்குச் செல்கிறது என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

கல்வி அமைச்சுக்கு முன்பாக நாளை முதல் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் | Protest In Front Of The Ministry Of Education

எந்தவொரு கல்விச் சீர்திருத்தமும் நிபுணர்களின் ஆலோசனையுடனும், முன்னோடித் திட்டங்கள் ஊடாகவும் மிகவும் அவதானமாகவே முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால், எவ்வித கலந்துரையாடல்களும் இன்றி அவசர கதியில் இந்த சீர்திருத்தங்கள் திணிக்கப்படுவதால் இவ்வாறான மன்னிக்க முடியாத தவறுகள் இடம்பெறுகின்றன.

எனவே, தமது பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக அனைத்துப் பெற்றோர்களும் எவ்வித பேதமுமின்றி நாளை காலை 9 மணிக்குத் தொடங்கவுள்ள இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இணைய வேண்டும். இந்த அழிவுகரமான கல்விச் சீர்திருத்தங்கள் முழுமையாகத் திரும்பப் பெறப்படும் வரை இந்தப் போராட்டம் ஓயாது என குறிப்பிட்டுள்ளார்.