பச்சைக் காதலன்

பச்சைக் காதலன்

ராமு தாத்தாவுக்கு உடம்பு சரியில்லையாம். எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்கிறார். வயதாகிவிட்டது. சொன்னாலும் கேட்பதில்லை. மங்களூரில் மழைக் காலம். வெளியில் சுற்றி இருக்கிறார். உடல் தாங்கவில்லை. சளியும் காய்ச்சலும் தொடங்கி இப்பொழுது வாட்டிக் கொண்டிருக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. வழக்கமாக இப்படியெல்லாம் குறுஞ்செய்தி அனுப்பமாட்டார். அவரே சமாளித்துக் கொள்கிற மனிதர்தான். இன்றைக்கு அனுப்பியிருக்கிறார். ரொம்பவும் முடியவில்லை போலிருக்கிறது. மனசு கேட்கவில்லை. ஒரு முறை பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும் என்றிருக்கிறது. மங்களூர் செல்வது பிரச்சினையில்லை. ஆனால் அலுவலகத்தில் விடுப்பு கேட்க வேண்டும். 

 

பாவம். இந்நேரம் தனியாக தவித்துக் கொண்டிருப்பார். தனிக்கட்டை. ராமு தாத்தாவுக்கு வயது எழுபதைத் தாண்டியிருக்கும். சரியாகத் தெரியவில்லை. ஆனால் ஆளைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றும். ‘உங்களுக்கு எவ்வளவு வயசு?’ என்று கேட்டிருக்கிறேன். ‘ஏன் பொண்ணு பார்க்க போறியா?’ என்று கேட்டு வாயை அடைத்துவிட்டார். மனைவி இல்லை. குடும்பம் இல்லை. சொந்த பந்தம் எதுவும் அருகில் இல்லை. 

 

இப்பொழுதெல்லாம் விடுப்பு கேட்டால் ஏதாவது காரணத்தைச் சொல்லி அலுவலகத்தில் பிரச்சினை செய்கிறார்கள். சில காலமாக என்.ஜி.ஓ ஒன்றுடன் தொடர்பில் இருக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. அது அவர்களை உறுத்துகிறது. அலுவலக வேலைகளில் கோட்டைவிட்டுவிடுவேன் என்று மேனேஜர் நினைக்கிறார். ஆனால் அதை நேரடியாகச் சொல்லாமல் வெவ்வேறு வழிகளில் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த என்.ஜி.ஓவில் நானாகச் சேரவில்லை. சீமாதான் சேர்த்துவிட்டாள். சீமா விஸ்வநாத். மைசூர் பெண். அம்சமான பெண் என்ற வர்ணிப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு எப்படித் தவிர்க்க முடியும்? இதைச் சாக்காக வைத்துக் கொண்டு அடிக்கடி அவளோடு பேசலாம் என்றுதான் சேர்ந்திருந்தேன். அவள் வேறொரு நிறுவனத்தில் வேலையில் இருக்கிறாள் என்றாலும் நாங்கள் ஒரே அபார்ட்மெண்ட். அவள் முதல் தளத்தில் இருக்கிறாள். ப்ளாட் நெம்பர் 103. நண்பர்களோடு நான் மூன்றாவது தளத்தில் இருக்கிறேன். 

 

அப்படித்தான் ராமு தாத்தாவும் அறிமுகம். அப்படித்தான் என்றால் அந்த என்.ஜி.ஓ வழியாக. அந்த ஞாயிற்றுக்கிழமையன்று கப்பன் பூங்கா வரச் சொல்லியிருந்தார்கள். ஏழு மணிக்கெல்லாம் நானும் சீமாவும் கிளம்பிவிட்டோம். ‘மரங்களைக் கட்டிப்பிடிப்போம்’ என்று அந்த நிகழ்வுக்கு பெயர். மரங்கள் நம் நண்பர்கள் என்ற விழிப்புணர்வை உருவாக்குவதற்காக நடத்துவார்கள். அன்றைய தினம் பூங்காவுக்கு வருகிறவர்கள் மரங்களைக் கட்டிப்பிடிக்க வேண்டும். சீமா கத்தரிப்பூ நிற பனியனும் ஜீன்ஸூம் அணிந்திருந்தாள். ‘பைக்கிலேயே வந்துவிடட்டுமா?’ என்று அவள் கேட்டபோது நெஞ்சுக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன என்று சொன்னால் க்ளிஷேவாகத்தான் இருக்கும். ஆனால் அப்படித்தான் இருந்தது. அவளுடைய அமெரிக்க உச்சரிப்பிலான ஆங்கிலத்தோடு கொஞ்சம் மாரடிக்க வேண்டியிருக்கும் என்பதுதான் ஒரே பிரச்சினை. ஆனால் சமாளித்துக் கொள்ளலாம்.

 

பூங்காவில் சீமாவுக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். அவர்களைச் சந்தித்தவுடன் அவள் என்னை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அது பரவாயில்லை. என்னோடு வண்டியில் வந்தவரைக்கும் போதும் என்று நினைத்துக் கொண்டேன். அதுவே ஆயிரத்தெட்டு பொன் பெறும். அன்றைய தினம் ராமு தாத்தாவும் அங்கு வந்திருந்தார். நெற்றி சுருங்கியிருந்தது. சற்றே கூன் விழுந்த முதுகு. இன்னமும் ஊன்றுகோல் வைத்துக் கொள்ளவில்லை- அருகில் தடி எதுவும் கண்ணில்படவில்லை. தலையும் வெளுத்துவிட்டது. கசங்கிய சட்டையும் பழைய பேண்ட்டும் அணிந்திருந்த அவர் அருகிலேயே ஒரு துணிப்பையும் கிடந்தது. கிடந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அதன் மீது எந்த கவனமும் இல்லாமல் மரங்களை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தார். பெங்களூர் போன்ற பெருநகரங்களில் இதற்கெல்லாம் அசாத்திய துணிச்சல் வேண்டும். இந்த ஊரில் தினமும் ஏதாவது தில்லாலங்கடி வேலைகளை கேள்விப்பட வேண்டியிருக்கிறது. ஏடிஎம்மில் ஒரு பெண்ணை வெட்டிவிட்டு பணத்தை பறித்துக் கொண்டு போன செய்தியை நீங்கள் வாசித்திருக்கக் கூடும். காலை எட்டரை மணிக்கு அந்தச் சம்பவம் நடந்தது. வெளியில் மனிதர்கள் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றிய எந்த பயமுமில்லாமல் ஷட்டரை மூடிவிட்டு வெட்டியிருக்கிறான். வெறும் இரண்டாயிரத்து சொச்ச ரூபாய்க்காக ஒரு கொலை. அப்பேற்பட்ட ஊரில் இந்த மனிதன் ஏதோவொரு தைரியத்தில் பையைக் கீழே போட்டுவிட்டு அமர்ந்திருக்கிறார்.

 

சீமா தனது நண்பர்களோடு விளையாடத் தொடங்கியிருந்தாள். மஞ்சள் நிற சட்டையணிந்திருந்த பெங்காலிக்காரன் - அவன் பெயர் செளனக். முன்பொருமுறை அவனை அறிமுகப்படுத்தியிருக்கிறாள், அவளிடம் அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்வான். சென்ற முறை அவன் பேண்ட்டை மிகக் கீழாக இறங்கி அணிந்திருந்தான். சீமா அதனை விளையாட்டாகச் சுட்டிக்காட்டிய போது ‘exposing is a status symbol' என்றான். பதிலுக்கு சீமா இரட்டை அர்த்தச் சொல் ஒன்றை உதிர்த்தாள். அதைவிட வீரியமான ஒரு சொல்லை அவன் பிரயோகிக்க இருவரும் சிரித்துக் கொண்டார்கள். சுற்றியிருந்தவர்களும் சேர்ந்து கொண்டார்கள். அதிலிருந்து செளனக் இருந்தால் அந்த இடத்திலிருந்து நான் ஒதுங்கிக் கொள்வேன். பொஸஸிவ்னெஸ் என்று கூட வைத்துக் கொள்ளலாம். ஆனால் பைசா பிரையோஜனமில்லாத பொஸஸிவ்னெஸ். அவளுக்கு என் மீது எந்த ப்ரியமும் இல்லை. எனக்கே அது தெரியும். ஆனாலும் ஒரு ஆசை இருக்கும் அல்லவா? அப்படியொரு ஆசை. களங்கமில்லாமல்.

 

அன்றும் செளனக் இருந்தான். அதனால் அப்பொழுதும் ஒதுங்கிக் கொண்டேன். தாத்தாவின் பையை அவர் அருகில் நகர்த்தி வைத்துவிட்டு அமர்ந்து கொண்டேன். பார்த்துச் சிரித்தார். சிரித்தவர் கீழே குனிந்து பொறுக்கத் துவங்கினார். ச்சே...பையை நகர்த்திய போது கீழே விழுந்திருக்கும் போல. என் தவறுதான். பையை நகர்த்தும் போது கவனிக்கவில்லை. மன்னிப்புக் கோரிவிட்டு அவரோடு சேர்ந்து பொறுக்கத் துவங்கினேன். அத்தனையும் மண் உருண்டைகள். அந்தப் பை முழுக்கவே அவைதான் இருந்தன. எண்ணிப்பார்த்தால் ஆயிரக்கணக்கில் தேறும். ஒருவேளை பைத்தியமாக இருக்கக் கூடும் என்று தோன்றியது. முக்கால் இஞ்ச் தள்ளி அமர்ந்து கொண்டேன். அவர் மீண்டும் ஒரு முறை சிரித்தபோது எனக்கு சிரிப்பு வரவில்லை. அவ்வளவு எச்சரிக்கையுணர்வு என்னிடம்.

 

அன்றைய தினம் ராமு தாத்தாவை நிகழ்வில் கெளரவிக்க அழைத்த போது ‘பையை பார்த்துக்குங்க’ என்று சொல்லிவிட்டு மேடைக்குச் சென்றார். இந்தக் கிழவனை எதற்காக அழைக்கிறார்கள் என்று குழப்பமாக இருந்தது. ஒரு நினைவுப்பரிசைக் கொடுத்து அவரிடம் ஒரு காகித உறையைக் கொடுத்தார்கள். அதில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கான காசோலை இருப்பதாகவும் அறிவித்தார்கள். கூச்சப்பட்டுக் கொண்டே வாங்கிக் கொண்டார். அவரை பேச அழைத்தார்கள். அவர் பேசுவதற்கு முன்பாக அவரைப் பற்றி தொகுப்பாளினி கொடுத்த அறிமுகம் மூச்சடைக்கச் செய்திருந்தது.

 

மாலையிலும் சீமா என்னோடு பைக்கிலேயேதான் வந்தாள். இந்த முறை பட்டாம்பூச்சி எதுவும் பறக்கவில்லை. அதற்கு காரணமிருக்கிறது- ராமு தாத்தாவைத்தான் யோசித்துக் கொண்டிருந்தேன். சீமா என்னனென்னவோ கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள். எதற்குமே பதில் சொன்னதாக ஞாபகமில்லை. அடுத்த நாள் அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு மங்களூர் கிளம்பியிருந்தேன். விடுப்பு கேட்பதற்காக பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னதாக ஞாபகம். 

 

ராமு தாத்தாவிடம் முகவரி வாங்கியிருந்தேன். அரைகுறையாக எனக்கு கன்னடம் கொத்து என்பதால் ஊரைக் கண்டுபிடிப்பதில் பெரிய சிரமம் இருக்கவில்லை. அது மங்களூருக்கும் உடுப்பிக்கும் இடையிலான கிராமம். நாய்கள் நசுங்கிக் கிடந்த தேசிய நெடுஞ்சாலையிலிருந்து உள்வாங்கி மூங்கில் மரங்களால் சூழ்ந்து கிடந்தது. ராமு தாத்தாவின் வீட்டை அங்கு எல்லோருக்குமே தெரிந்திருந்தது. ஆனால் தாத்தா வீட்டில் இல்லை. 

 

‘உடுப்பி போயிட்டாரே’ அருகிலிருந்த டீக்கடை மாஸ்டர் முகத்தையே பார்க்காமல் சொன்னார்.  

 

நேற்றிரவுதான் பெங்களூரிலிருந்து வந்திருக்கிறார். இன்று காலையிலேயே கிளம்பி உடுப்பி சென்றிருக்கிறார். டீக்கடையில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. தாத்தாவுக்கு ஊருக்குள் மரியாதை அதிகம் போலத் தெரிந்தது.  ‘வாழ்நாள் முழுக்க மரங்களுக்காகவே வாழ்ந்திருக்கிறார்....நல்ல மனுஷன்’ என்றார்கள்.

 

‘தாத்தாவுக்கு திருமணம் ஆகியிருந்தது. டீச்சர் பொம்பளை. இந்த ஆள் வீட்டிலேயே தங்குவதில்லை என்று பிரிந்துவிட்டார்’

 

‘தாத்தா கர்நாடக அரசில் பணிபுரிந்தவர். பச்சை இங்க்கில் கையெழுத்து போடும் க்ரேடு. இருபத்தேழு வயதிலேயே மரம் வைப்பதில் நாட்டம் வந்துவிட்டது. வாங்குகிற சம்பளம் எல்லாம் மரங்களுக்குத்தான். இவர் வைத்து வளர்த்துவிட்டு வந்த மரங்களையெல்லாம் அரசாங்கமும் மரம் திருடிகளும் பின்னாலேயே வெட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனாலும் தாத்தா சலித்ததில்லை. பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பாக வேலையை உதறிவிட்டு இந்த கசங்கிய சட்டை பேண்ட்டுக்கு மாறிவிட்டார். அப்பொழுதிருந்தே இப்படித்தான்’

 

‘கல்யாணத்துக்கு முன்னாடியே அவருக்கு வேறொரு பெண்ணுடன் காதல் இருந்தது. அந்தப் பெண்ணை ஏதோ கொள்ளை நோய் அள்ளிக் கொண்டது. அவள் நினைவாகவேதான் மரங்களைக் காதலிக்கத் துவங்கினார்’ - ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவரிடமும் தாத்தா பற்றிச் சொல்வதற்கு ஏதாவது இருக்கிறது. 

 

தாத்தாவுக்கு சொற்பமான பென்ஷன் வந்து கொண்டிருந்தது. அந்த வருமானமும் நாற்று வாங்கவும் குழி தோண்டும் ஆட்களுக்குக் கொடுக்கவும் தண்ணீர் இல்லாத இடங்களில் வண்டியில் வாங்கி ஊற்றுவதற்கும் சரியாகப் போய்விடுகிறது. அப்படியானால் ‘சாப்பாட்டுக்கு என்ன செய்வார்?’ இந்தக் கேள்வி எனக்கும் உங்களுக்கும்தான் முக்கியமான கேள்வி. ராமு தாத்தாவுக்கு அது பிரச்சினையே இல்லை. திருமண மண்டபத்திலும் விஷேச வீடுகளிலும் கை நனைத்துக் கொள்வார். எதுவுமே சிக்காத போது எது கிடைத்தாலும் சரி. அவரைப் பிச்சைக்காரனாகக் கருதிக் கொடுத்தாலும் முகம் சுளித்துக் கொள்ளாதவர். 

 

தாத்தா வரட்டும் என மாலை வரை சுற்றிக் கொண்டிருந்தேன். உடுப்பியிலிருந்து மாலையில் வந்து சேர்ந்தார். கப்பன் பூங்காவில் சந்தித்ததை நினைவுபடுத்தினேன். வாயெல்லாம் பற்களாக சிரித்தார்.  கண் பார்வை மங்கிக் கொண்டிருப்பதாகச் சொன்னவர் தடுமாறிக் கொண்டே வந்து சேர்ந்திருக்கிறார். அன்றைய இரவில் தன்னோடு தங்கிக் கொள்ளச் சொன்னபோது எனக்கு இரட்டைச் சந்தோஷம். அந்த வீடு அவருடைய பூர்விகச் சொத்து. அது மட்டும்தான் சொத்து. விடிய விடிய பேசிக் கொண்டிருந்தோம். 

 

‘ஐயாயிரம் வருஷமா வாழ்ந்து முடிச்ச மரங்கள் இன்னமும் இருக்கு தெரியுமா? கலிபோர்னியால...மெதுசெலான்னு பேரு...ரொம்ப சீக்ரெட்டா வெச்சிருக்காங்க...அதை பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசை. முடியல...ஆனா அதே கலிபோர்னியால த ப்ரெசிடெண்ட்ன்னு ஒரு மரம் இருக்கு...மூவாயிரத்து இருநூறு வருஷம் ஆச்சு.....நேரில் பார்த்தேன்..அழுதுட்டேன் தம்பி...என் பாட்டிக்கு முப்பாட்டிக்கு முப்பாட்டி. கட்டிப்புடிச்சுட்டு அங்கேயே நின்னுட்டேன்...முட்டாபசங்க..இவனுக அறுபது வயசு வாழுறதே பெரிசு..ஆனா எந்த யோசனையும் இல்லாம அறுத்துத் தள்ளுறாங்க....’பேசிக் கொண்டேயிருந்தார். தொண்டை கமறிவிட்டது.

 

அதன் பிறகு தாத்தாவும் நானும் நண்பர்களாகி விட்டோம். அவர் பெங்களூர் வரும் போதெல்லாம் என்னோடு தங்கத் துவங்கினார். இப்படியேதான் பேசிக் கொண்டிருப்போம் என்று சொன்னால் அது துல்லியமாக இருக்காது. அவர் பேசிக் கொண்டிருப்பார். நான் கேட்டுக் கொண்டிருப்பேன். ‘சஹாரா பாலைவனத்தில ரொம்ப வருஷமா ஒரேயொரு மரம் மட்டும் இருந்துச்சு...மொத்த பாலைவனத்துக்கும் காவல் தெய்வம் மாதிரி...விட மாட்டாங்களே...1973ல அழிச்சுட்டாங்க...அம்மாவை அழிக்கிற மாதிரி...இல்ல இல்ல... குழந்தையைக் கொல்லுற மாதிரி..இல்லையா?’தாத்தாவுக்கு மரம்தான் எல்லாமும். எதைப் பற்றி பேச்சைத் தொடங்கினாலும் மரத்தில் முடிப்பார். 

 

இப்பொழுதெல்லாம் சீமாவுடனான தொடர்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. தாத்தாவுடன் பேசுவதற்குத்தான் நிறைய இருக்கின்றன. 

 

‘ஏன் அரசாங்க வேலையை விட்டீங்க?’ என்றபோது ‘காசு கொடுத்தான்...வாங்கி நாற்பது ஊரில் மரங்களை நட்டேன்’ என்ற தாத்தாவைவிடவும் சீமா சுவாரசியமாகத் தெரியவில்லை. 

 

அதன்பிறகு எனக்கு வட கர்நாடகத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு பாதையும் அத்துப்படியாகியிருந்தது. ஒவ்வொரு ஊராகச் சுற்றினோம். அதுதான் மேனேஜருக்கு உறுத்தத் துவங்கியிருந்தது. இப்படித்தான் கடந்த ஆறு மாதங்களாக திரிந்து கொண்டிருக்கிறோம்- இன்றைய குறுஞ்செய்தி வந்து சேர்ந்த வரைக்கும். அலுவலகத்தில் சொல்லாமலேயே கிளம்பியிருந்தேன். சீமாவும் ஒட்டிக் கொண்டாள். ஆனால் பேருந்தில் இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. அப்படியே பேசினாலும் தாத்தா பற்றித்தான் பேசிக் கொண்டோம். 

 

‘எப்படி ஒரு மனுஷன் காலம் பூராவும் இப்படியே இருக்க முடியும்?’ சீமாவின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.

 

எப்படி இருந்திருக்க முடியும்? மரங்களுக்காகவே வாழ்ந்திருக்கிறார். பெரிய அங்கீகாரம் எதுவும் இல்லை. ஆனால் அதையெல்லாம் அவர் எதிர்பார்க்கவே இல்லை. குழந்தைகளை அழைத்து மரங்களைப் பற்றிய கதைகளைச் சொல்கிறார். மூங்கில் விதைகளை ஈரமண்ணுக்குள் திணித்து அதை காய வைத்து போகிற  இடங்களில் எல்லாம் கொடுக்கிறார். மழைக் காலத்தில் அவற்றை நிலத்தில் போட்டுவிட்டால் போதும். மேலே இருக்கும் மண் கரைந்து மூங்கில் முளைக்கத் துவங்கும். அந்தக் குழந்தைகள்- மரங்களை குழந்தைகள் என்றுதான் சொல்வார்- வளர்வதைப் பார்ப்பதை மட்டுமே தன் வாழ்நாளின் லட்சியமாகக் கொண்டிருந்தவர். எந்த தனிப்பட்ட அபிலாஷைகளும் இல்லாத அந்த மனிதன் ஒருவிதத்தில் கடவுள்.

 

மங்களூரை நோக்கிச் சென்ற சாலையெங்கும் தென்மேற்கு பருவமழையின் சாரல் சிலுசிலுத்துக் கொண்டிருந்தது. சீமாவின் அருகாமை எனக்குத் தேவையாக இருந்தது. சீமாவும் இல்லையென்றால் இந்தப் பயணம் இன்னமும் வெறுமையானதாக இருந்திருக்கும். தாத்தாவின் காதல் கதையை யாரிடமாவது சொல்லிவிட வேண்டும் எனத் தோன்றியது. அதை ஒரு முறை என்னிடம் சொல்லியிருக்கிறார். நிலவும் நட்சத்திரங்களும் மேகங்களுக்குள் புதைந்து போயிருந்த ஓரிரவில் மொட்டை மாடியில் அமர்ந்தபடி அந்தக் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தேன். 

 

தாத்தாவுக்கு பதினேழு வயதாகியிருந்த போது மைசூருக்கு படிக்கச் சென்றிருந்தார். அப்பொழுது அது உடையார்களின் சாம்ராஜ்யம். ஹைதர் அலி, திப்புசுல்தானின் பொம்மைகளாக இருந்தவர்கள் ஆங்கிலேயர்களுக்கு சாமரம் வீசிக் கொண்டிருந்தார்கள். அங்குதான் ராமு தாத்தா அவளைச் சந்தித்திருக்கிறார். பசவம்மா. கொஞ்ச நாட்களிலேயே இருவருக்கும் காதல் பிரவாகமெடுத்திருக்கிறது. அந்தக் காலத்துக் காதல். வெவ்வேறு சாதி. விடுவார்களா? துரத்தியிருக்கிறார்கள். 

 

உடையார்களின் ஆட்கள்தான் துரத்துவதாகச் சொல்லியிருக்கிறார்கள். பசவம்மாவின் அப்பா உடையார்களின் அரண்மனையில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். அதனால் அவர்களின் மூர்க்கம் அதிகமாக இருந்தது. இதையெல்லாம் தெரிந்து கொண்ட ராமு தாத்தாவின் மாமா கதறியிருக்கிறார். அவர்தான் பெற்றோர்களை இழந்துவிட்ட ராமு தாத்தாவை படிக்க வைத்தவர். ஆனால் தாத்தா தம் காதலில் உறுதியாக இருந்திருக்கிறார். பசவம்மாவை அழைத்துக் கொண்டு இருவருமாக குதிரைமுக்குக்கு ஓடியிருக்கிறார்கள். அது ஒரு மலைப்பகுதி. குதிரையின் மூக்கு வடிவில் இருக்கும் என்பதால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. அப்பொழுது அந்த மலையில் கால்நடை மேய்ப்பவர்களைத் தவிர யாருமே இல்லை. ஓடிவந்தவர்கள் ஒரு குகையில்தான் தங்கியிருந்தார்களாம். அந்த குகையைச் சுத்தம் செய்யவே பல நாட்கள் ஆனதாகச் சொன்னார். பழங்களும் காய்களும்தான் உணவு. ஆறு மாதங்களுக்குப் பிறகு ஊருக்குள் செல்வதாக திட்டமிட்டிருக்கிறார்கள். கிழமைகள் தெரியாத நாட்கள், நேரம் குறித்த கவலையில்லாத வாழ்க்கை,  பணத்துக்கு அவசியமில்லாத தினங்கள், நம்மை நோக்கிய கேள்விகள் இல்லாத உலகம். இப்படியான அந்த உலகில் நமக்குப் பிடித்த பெண்ணுடனான வாழ்க்கை என்பது சொர்க்கம். இல்லையா? அப்படித்தான் தாத்தாவும் சொன்னார்.

 

ஆனால் அந்த சொர்க்கத்துக்கு ஆயுள் குறைவு. மூன்று மாதங்கள்தான். அந்த கருப்பு தினத்தின் அதிகாலையில் இருவரும் உறக்கத்திலிருந்து எழுவதற்கு முன்பாகவே ஆட்கள் வந்துவிட்டார்கள். எப்படி மோப்பம் பிடித்தார்கள் என்று தெரியவில்லை. தங்களை அரண்மனையின் ஆட்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். உங்களைப் போலவேதான் நானும் குதிரையில் வாளேந்திய வீரர்களாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படியெல்லாம் இல்லை. வெகு இயல்பான மனிதர்கள் நான்கைந்து பேர்கள். நடந்துதான் வந்திருந்தார்களாம். இருவரையும் அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். இன்னமும் முழுமையாக விடிந்திருக்கவில்லை. வெளிச்சம் வருவதற்கு இன்னமும் வெகுநேரம் இருந்தது. பசவம்மா ராமு தாத்தாவின் கரங்களைப் பிடித்துக் கொண்டார். ‘அங்கே வந்தால் வாழ விடமாட்டார்கள்’ என்று அழத் தொடங்கியிருக்கிறார். தீப்பந்தத்தை பிடித்துக் கொண்டு நின்றவர்கள் அவசரப்படுத்துகிறார்கள். அடுத்த கணத்தில் தாத்தாவை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்குகிறாள். தாத்தாவுக்கு எங்கே போகிறோம் என்பது  கூடத் தெரியவில்லை. சிறுத்தையின் வாலைப் பிடித்துக் கொண்டு அதன் வேகத்துக்கு ஓடுவது போல இருக்கிறது தாத்தாவுக்கு. அரண்மனை ஆட்களும் பின்னாலேயே ஓடி வருகிறார்கள். குதிரை முக்கின் உச்சியை அடைவதற்கும் ராமு தாத்தாவை அரண்மனையின் ஆட்கள் எட்டிப்பிடிப்பதற்கும் சரியாக இருக்கிறது.

 

இரண்டே வினாடிகள்தான். சப்தமே இல்லை. தாத்தாவின் கைகளை விடுவித்துவிட்டு பசவம்மா எட்டிக் குதித்துவிட்டாள். தாத்தாவின் கண்கள் இருண்டு போகின்றன. என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. மயங்கி விழிக்கும் போது எங்கேயோ கிடக்கிறார். யாருமே இல்லாத வனாந்திரம் அது. வந்தவர்கள் அரண்மனை ஆட்கள்தானா? எதற்காக இங்கே கொண்டு வந்து போட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் எதுவுமே தெரியவில்லை. யோசிக்கவும் விரும்பவில்லை. குதிரை முக்குக்கு ஓடியிருக்கிறார். தனது எதிர்காலம் இந்த மலையுச்சியிலிருந்து விழுந்து சிதறியதை எண்ணியபடியே தேடியதில் சிதறிய உடல்தான் கிடைத்திருக்கிறது. முகம் சிதைந்து அடையாளமே தெரியவில்லை. அவளது புன்னகை, கன்னத்தோரமாக இருந்த மச்சம் என்று எல்லாவற்றையும் அந்த முகம் தொலைத்திருந்தது. ‘என் குழந்தையை கொன்னுட்டீங்களேடா’என்கிற அவரது அழுகை மட்டும் குதிரைமுக்கில் எதிரொலித்திருக்கிறது. யாருமே பதில் சொல்லாத அழுகை அது. கண்ணீரைத் துடைப்பதற்கு எந்த விரல்களும் நீளாத தருணம் அது. தனித்து அழுது கொண்டிருக்கிறார். தனக்கென யாருமே இல்லாத அந்த உலகத்தில் பறவைகள் கூடடையும் நேரத்தில் அதே இடத்தில் அடக்கம் செய்துவிட்டு மண்மேட்டின் மீது ஒரு விதையை ஊன்றினார். இனி அதுதான் உலகம் என்று தோன்றியிருக்கிறது.  தனது பயணத்தை அப்பொழுது தொடங்கியவர்தான். யாருமே இல்லாத தனிமையில் நிற்காமல் நடந்து கொண்டேயிருக்கிறார். 

 

தனது கையில் ‘ப’ என்ற கன்னட எழுத்தை பச்சை குத்தியிருப்பார். அந்த ‘ப’ வேறொன்றுமில்லை என் பசவம்மா என்று சொல்லிவிட்டு கண்களை ஊடுருவினார். ‘இங்க யாருமே தனியா இல்ல..யாராவது நம்ம கூடவேதான் இருப்பாங்க..எனக்கு பசவம்மா இருக்கா...எனக்கும் அவளுக்கும் பிறந்த இந்த புள்ளைக இருக்காங்க’ என்று சொல்லியபோது தாத்தாவின் கண்கள் பனித்ததை பார்த்தேன். சிரிப்பை வலுக்கட்டாயமாக வரவழைத்து தனது அழுகையை மறைக்க முயன்றார். அவருக்கு சங்கடம் தரக் கூடாது என வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

 

‘அதன் பிறகு வேறு திருமணம் செய்து கொண்டீர்களா?’ எனக் கேட்கத் தோன்றியது. ஆனால் கேட்கவேயில்லை. தாத்தாவின் கதையைச் சொல்லி முடித்த போது சீமாவும் அதே கேள்வியை என்னிடம் கேட்டாள். 

 

நாங்கள் சென்றிருந்த போது கண்களை மூடிக் கிடந்தார். நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. மரணப்படுக்கை. முகத்தில் ஈயாடிக் கொண்டிருந்தது. சுற்றிலும் நான்கைந்து பேர்கள் நின்று கொண்டிருந்தார்கள். தாத்தாவின் உறவினர்கள் போலிருக்கிறது. முகங்களை இறுக்கமாக வைத்திருந்தார்கள். ‘பூர்வீக வீட்டுக்காக காத்திருப்பவர்கள்’என்று முன்பொருமுறை தாத்தா சொன்னது ஞாபகம் வந்தது. காதருகில் சென்று தாத்தா என்றேன். அவரால் கண்களைத் திறக்க முடியவில்லை. டீக்கடைக்காரர் அருகில் வந்து தோளில் கை வைத்து அழுத்தினார். தனியே அழைப்பதற்கான சமிக்ஞை அது.

 

‘இங்கே நிற்க வேண்டாம்’ 

 

‘ஏன்?’ சீமாவுக்கு அவசரம். கேட்டுவிட்டாள்.

 

‘இங்க ரிலேட்டிவ்ஸ் சரி இல்லை...நீங்க கிளம்புங்க’

 

‘அப்படின்னா?’

 

‘அவங்க சொத்துக்காக நிக்கிறாங்க...உயில் எழுதி ரேகை உருட்டிட்டாங்க...தாத்தா சாகலைன்னா கூட இன்னைக்கு தூக்கிடுவாங்க’ கேட்க அதிர்ச்சியாக இருந்தது. 

 

‘அப்படி கூட செய்ய முடியுமா? அந்த மனுஷன் வாழ்நாள் பூராவும் மரம் மரம்ன்னு அலைஞ்சாரு...ஒருவேளை நல்ல சாப்பாடு சாப்பிட்டே கூட பல வருஷம் ஆகியிருக்கு...சாகும் போதாவது நல்லபடியா சாகட்டும்..நாங்க போக முடியாது..இங்கேயே இருக்கோம்...வேணும்ன்னா போலீஸைக் கூப்பிடலாம்’- எங்கள் பதில் டீக்கடைக்காரருக்கு திருப்தியளிக்கவில்லை.

 

‘இல்ல அவங்க லோக்கல்ஸ்...தாத்தாவுக்காக நீங்க நிக்கிறது சரிதான்..ஆனா பிரச்சினை பெரிசாகும் போலிருக்கு...காலாகாலத்துக்கும் தாத்தாவைவிட இந்த சண்டைதான் உங்க மனசுலேயே நிக்கும்’ அந்த பதில் எங்களை சமாதானப்படுத்தவில்லை. வீட்டைவிட்டு வெளியே செல்லப் போவதில்லை என்று முடிவு செய்து வைத்திருந்தோம். அந்த மனிதனுக்கு எங்களால் முடிந்த ஒரே உதவி அதுதான். எங்கள் முடிவு அங்கிருந்தவர்களை சலனப்படுத்தியிருக்கக் கூடும். இறுக்கம் கூடியிருந்தது.

 

‘நீங்க கிளம்புங்க’ என்றார் அந்த கூட்டத்திலிருந்த நீலச்சட்டைக்காரர்.

 

அவருக்கு எந்த பதிலும் சொல்லாமல் இந்த முறை தாத்தாவின் அருகில் சென்று அவரது வலது கரத்தை அழுந்தப் பிடித்தேன். சீமாவும் அருகில் அமர்ந்து கொண்டாள். இருவரும் ‘ப’ வைத் தேடினோம். மூடிய கண்களுக்குள் விழிகள் அசைந்து கொண்டிருந்தன. ஏதோ ஒரு ஆன்மாவைத் தேடித் தேடி தன் காலங்களை தீர்த்த விழிகள் அவை. அந்த விழிகளைப் பொறுத்தவரையில் மரங்கள் மட்டும்தான் உயிர். பிற அனைத்துமே-மனிதன் உட்பட- மரங்கள்தான். மரங்களை புரிந்து கொள்ளும் மனிதனுக்கு மனிதர்களை புரிந்து கொள்ள முடியாதா என்ன? மூடிய விழிகளிலிருந்து நீர் கசிந்தது. ஒரு துளிதான். அடுத்த கணமே பெருமூச்சொன்று எழும்பி அடங்கியது. அதற்கு மேல் அங்கு ஒன்றுமில்லை. வெளியில் மழைக்காற்று வீசிக் கொண்டிருந்தது. தாத்தாவின் பெருமூச்சு மூங்கில் மரங்களுக்குள் புகுந்து வெளியேறிக் கொண்டிருந்தது. சீமாவும் நானும் மழையிலேயே பேருந்து நிலையத்தை நோக்கி நடக்கத் துவங்கியிருந்தோம்.