உன் கண்ணில் நீர் வழிந்தால்

உன் கண்ணில் நீர் வழிந்தால்

கண்ணதாசன் எழுதிய பாடல்களில் பிடித்த பாடல்கள் ஏராளம் இருந்தாலும் “உன் கண்ணில் நீர் வழிந்தால்” அளவுக்கு எதுவும் என்னை கவர்ந்ததில்லை.சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாரதி எழுதியதாக நான் நம்பிய பாடல்.தமிழ் திரையுலகின் கவிச்சக்கரவர்த்தி கண்ணதாசனே என்று இன்றும் எடுத்தியம்பிக் கொண்டிருக்கும் பாடல்களில் முக்கியமானதொரு பாடல்.பாரதியின் வரிகளை அதுவும் பாரதியின் அதிசிறந்த தொகுப்பாக பலரால் கருதப்படும் கண்ணன் பாட்டில் இருந்து ஆரம்ப வரிகளை எடுத்து அதற்கு இணையாக வரிகளை புனைவது இலகுவான விடயமா என்ன?

 

வயது முதிர்ந்த கணவன் தன் மனைவியை நோக்கி பாடும் பாடல் ஆதலால் பாடல் வரிகள் காதலை தாண்டிய அன்பையும் அப் பந்தத்தின் வலிமையையும் பரஸ்பர மரியாதை மற்றும் புரிந்துணர்வையும் வெளிப்படுத்த வேண்டும். அதே போல் தம்மை தனியே விட்டு சென்ற பிள்ளைகளை எண்ணி பாடுவதால் அவ் உறவுகளின் நிலையற்ற தன்மை,விரக்தி,சோகம் என்பன பாட்டில் பிரதிபலிக்கப்படுதல் வேண்டும்.எவ்வளவு கடினம்!!

பாரதியின் வரிகளை தொடர்ந்து “உன்னைக் கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயமானதடி” என்று ஆரம்பித்து ‘கணவனால் தான் மனைவிக்கு பெருமை’ என்ற நீண்டகால நம்பிக்கையை / நியதியை உடைக்கும் வகையில்
பொன்னை மணந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி
என்று பாடும் சந்தர்ப்பத்தில் ‘ஆயிரம் வைரமுத்துக்கள் உனக்கு இணையாவரோ’ என்று தான் கேட்க தோன்றியது. (இது தமிழ் சினிமாவுக்கு தான் புதிது குறுந்தொகையில் ஏற்கனவே உள்ளது. “நல்லோள் கணவன் இவன் எனப் பல்லோர் கூற, யாஅம் நாணுகம் சிறிதே”)

காலச் சுமைதாங்கி – போலவே
மார்பில் எனைத்தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய் – அதிலென்
விம்மல் தணியுமடி

என்ற வரிகளில் அத் தம்பதிகளிடையேயுள்ள புரிந்துணர்வையும் காதலை தாண்டிய அன்பையும் சோகத்தையும் ஒருங்கே வெளிப்படுத்தி

ஆலம் விழுதுகள் போல்- உறவு
ஆயிரம் வந்து மென்ன
வேரென நீ யிருந்தாய் – அதில்
நான் வீழ்ந்து விடாதிருந்தேன்
ஆலம் வேர் மற்றும் விழுதுகள் -என்னவொரு உவமை 

 

வேரென நீ யிருந்தாய் – என் வாழ்வின் ஆதாரமே நீ தான் என்று அப் பந்தத்தின் வலிமையையும் மற்றைய உறவுகளின் நிலையற்ற தன்மையும் இரு வரிகளில் அழகாகக் கூறியும் திருப்தியடையாது

பேருக்குப் பிள்ளையுண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
என்தேவையை யாரறிவார் – உனைப்போல்
தெய்வமொன்றே அறியும்
என்ன வரிகளடாப்பா சாமி!
அந்த தெய்வத்தைப் போல் முழுதாய் என்னை அறிந்தவள் நீயல்லவா? நீ மட்டுமல்லவா? என் உயிரோடு கலந்த என் இன்னொரு பாதி நீயல்லவா? “ஓருயிரும் ஈருடலும்” என்பதை இதைவிட அழகாகச் சொல்ல முடியுமா என்ன