தையிட்டி விகாரையில் மத வழிபாடுகளை அனுர அரசு ஊக்குவிக்கிறது! – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு

தையிட்டி விகாரையில் மத வழிபாடுகளை அனுர அரசு ஊக்குவிக்கிறது! – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு

தையிட்டியில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை அபகரித்து அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் விகாரையில் தொடர்ச்சியாக மத வழிபாடுகள் முன்னெடுக்கப்படுவதை அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊக்குவித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாதுகாப்புப் படையினரின் ஏற்பாட்டில் தையிட்டி திஸ்ஸ விகாரையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற பூஜை வழிபாடுகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தையிட்டி பகுதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில், பொதுமக்களுக்குத் தெரியாமல் விகாரை கட்டப்பட்டதாகவும், பின்னர் அப்பகுதி விடுவிக்கப்பட்டபோது மக்கள் தமது பூர்வீகக் காணிகளில் விகாரைக் கட்டுமானங்கள் அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காணிகளை இழந்த மக்கள் தமது பூர்வீக நிலங்களை மீட்டுத் தருமாறு கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் போராட்டத்திற்கு தமது கட்சி ஆதரவு வழங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தையிட்டி விகாரையில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் தென்னிலங்கையிலிருந்து மக்களை அழைத்து வந்து பூஜை வழிபாடுகள் நடத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, வலிகாமம் வடக்கில் பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 2,500 ஏக்கர் காணிகள் இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், மக்களின் காணிகள் அவர்களிடமே மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

மதங்களை மதிப்பதாகத் தெரிவித்த அவர், மதத்தின் பெயரால் மக்களின் பூர்வீகக் காணிகள் அபகரிக்கப்படக் கூடாது என்றும், தையிட்டி விகாரைக் கட்டுமானத்தை அகற்றி காணிகளை உரிய மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.