யாழ்ப்பாணத்தில் ஏ.டி.எம் அருகே இளைஞன் மீது தாக்குதல்! பணத்தையும் பறித்த போதை ஆசாமி

யாழ்ப்பாணத்தில் ஏ.டி.எம் அருகே இளைஞன் மீது தாக்குதல்! பணத்தையும் பறித்த போதை ஆசாமி

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்திற்கு அருகில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி, அவரிடமிருந்த பணத்தைப் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்வியங்காடு சந்தைக்கு அண்மையில் அமைந்துள்ள மதுபானசாலைக்கு முன்னால் போதையில் நின்ற நபர் ஒருவர், எதிரே உள்ள வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க வருபவர்களை அச்சுறுத்தி பணம் பெற்று வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்துவிட்டு வந்த இளைஞர் ஒருவரிடமும் குறித்த நபர் பணம் கேட்டுள்ளார். இளைஞர் பணம் கொடுக்க மறுத்ததைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியதுடன், போதையில் இருந்த நபர் இளைஞனை மூர்க்கத்தனமாகத் தாக்கி, அவரிடமிருந்த பணத்தையும் பறித்துச் சென்றுள்ளார்.

வேடிக்கை பார்த்த பொதுமக்கள்!

குறித்த சம்பவம் இடம்பெற்றபோது அருகிலிருந்த கடைப் பணியாளர்கள் மற்றும் வீதியில் சென்ற பலரும் அதனைப் பார்த்தும் தலையிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து கடைப் பணியாளர்களிடம் விசாரித்தபோது, குறித்த நபர் தினமும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவருடன் முரண்பட்டால் கடைகளைத் தாக்குவது மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவார் என்பதால் அமைதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு பலமுறை அறிவித்தும் நடவடிக்கை இல்லையா?

குறித்த நபரின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு பலமுறை அறிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி கடைப் பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இவ்வாறான சம்பவங்களைத் தடுக்க பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.