
ஏழு மாதங்களில் பதின்ம வயது கர்ப்பங்கள் தொடர்பில் 44 முறைப்பாடுகள்
2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் (ஜனவரி 1 முதல் ஜூலை 31 வரை) பதின்ம வயது கர்ப்ப சம்பவங்கள் தொடர்பாக 44 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) தெரிவித்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மொத்தம் 5,461 சிறுவர்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பெற்றுள்ளது. இவற்றில் 4,501 முறைப்பாடுகள் சட்டத்துடன் தொடர்புடையவை எனவும், 960 முறைப்பாடுகள் சட்டத்துடன் தொடர்பற்றவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த காலப்பகுதியில், சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 141 முறைப்பாடுகள், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 330 முறைப்பாடுகள், மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 32 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன.
இதில், அதிகபட்சமாக சிறுவர்கள் மீதான சித்திரவதை தொடர்பாக 1,126 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன. மேலும், சிறுவர்கள் யாசகம் பெறுவது தொடர்பாக 125 முறைப்பாடுகள் மற்றும் சிறுவர் தொழிலாளர் தொடர்பாக 82 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இதே காலப்பகுதியில், சிறுவர்களுக்கு எதிரான இணைய மிரட்டல் தொடர்பாக 81 முறைப்பாடுகள், தற்கொலை தொடர்பாக 10 முறைப்பாடுகள், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக 63 முறைப்பாடுகள், குழந்தைத் திருமணம் தொடர்பாக 3 முறைப்பாடுகள், மற்றும் கருக்கலைப்பு தொடர்பாக 1 முறைப்பாடு பெறப்பட்டுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.