
பிரபல வங்கியின் பெயரை பயன்படுத்தி 600 கோடி ரூபா மோசடி
இலங்கையின் பிரதான தனியார் வங்கி ஒன்றின் பெயரை பயன்படுத்தி 600 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனியார் வங்கி ஒன்றின் அதிகாரபூர்வ இணையத் தளத்திற்கு இணையான இணைய தளம் ஒன்றை உருவாக்கி அதன் ஊடாக பெரும் எண்ணிக்கையிலானவர்களை ஏமாற்றி இவ்வாறு பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் குற்றப் புலனாய்வு திணைக்களம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
இந்த பாரிய அளவிலான நிதி மோசடி தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்தி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க போதாரகம உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொழும்பு குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
இந்த குற்றச்செயல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்திருந்தனர்.
இலங்கையின் பிரதான தனியார் வங்கி ஒன்றின் டிஜிட்டல் சேவை வழங்கும் அதிகார பூர்வ இணைய தளத்திற்கு இணையான போலி இணையதளம் ஒன்றை உருவாக்கி அதன் ஊடாக பலரை ஏமாற்றி பண மோசடி செய்யப்பட்டுள்ளது என குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திட்டமிட்ட அடிப்படையில் சைபர் குற்றவாளிகள் இந்த போலி இணையதளத்தை உருவாக்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் ஊடாக பாரிய அளவில் பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோசடி தொடர்பில் விசாரணைகளை நடத்தி விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் அறிக்கை ஒன்றை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பிரதான நீதவான், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.