ஆண்மையை நீக்க நடவடிக்கை : மடகாஸ்கர் அரசாங்கம் அதிரடி!
குழந்தைகளுடன் தகாத முறையில் நடந்து கொள்ளும் குற்றவாளிகளின் ஆண்மையை நீக்குவதற்கு மடகாஸ்கர் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, குறித்த குற்றவாளிகளுக்கு இரசாயன ரீதியிலும், அறுவை சிகிச்சை மூலமாகவும் ஆண்மை நீக்கம் செய்ய வகை செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் இன்று மடகாஸ்கர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மடகாஸ்கர் அரசாங்கத்தின் இந்த சட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள மடகாஸ்கர் தீவில் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்.
இந்த நிலையில், மடகாஸ்கரில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மடகாஸ்கரில் கடந்த ஆண்டு சுமார் 600 சிறுமிகள் தகாத முறையில் நடத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான வழக்குகள் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 133 சிறுமிகள் தகாத முறையில் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பின்னணில், குழந்தைகளுடன் தகாத முறையில் நடந்து கொள்ளும் குற்றவாளிகளுக்கான தண்டனையை அதிகரிக்க மடகாஸ்கர் அரசாங்கம் அதிரடி முடிவெடுத்துள்ளது.
இதன்படி, குறித்த குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மடகாஸ்கர் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குற்றவாளிகளுக்கு இரசாயன ரீதியிலும், அறுவை சிகிச்சை மூலமாகவும் ஆண்மை நீக்கம் செய்ய வகை செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டம் இன்று மடகாஸ்கர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் அந்த நாட்டின் உயர் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்று பின்னர் அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது.
அதிபரின் ஒப்புதல் கிடைத்ததவுடன் குறித்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த சட்டத்தின்படி, 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுடன் தகாத முறையில் நடந்து கொள்ளும் சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கப்படும்.
அத்துடன், 10 முதல் 13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுடன் தகாத முறையில் நடந்து கொள்ளும் சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அறுவை சிகிச்சை மூலமோ அல்லது இரசாயன முறையிலோ ஆண்மை நீக்கப்படும்.
மேலும், 14 முதல் 17 வயதிற்கு உள்பட்ட சிறுமிகளுடன் தகாத முறையில் நடந்து கொள்ளும் குற்றவாளிகளுக்கு இரசாயன முறையில் ஆண்மை நீக்கப்படும்.
ஆண்மை நீக்கம் மாத்திரமின்றி குறித்த குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.