இலங்கையில் EPF ஊழியர்களின் பணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் - நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் EPF ஊழியர்களின் பணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் - நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் ஊழியர் சேமலாப நிதி (EPF) பங்களிப்புகளைச் சரியாகச் செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.பியதிஸ்ஸ கூறியுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், தொழிலாளர் துறையின் இணையவழி முறைப்பாட்டு மேலாண்மை அமைப்பு (Online Complaint Management System) பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ஊழியர்கள் தற்போது தொழிலாளர் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக நேரடியாக முறைப்பாடுகளைப் பதிவு செய்யலாம்.

இதற்கமைய தொடர்பு விபரங்களை வழங்கும் நபர்களுக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உடனுக்குடன் அறிவிக்கப்படும்.

தவறிழைக்கும் நிறுவனங்களுக்கு முதலில் முறையான அறிவித்தல் அனுப்பப்படுவதுடன், பின்னர் நிறுவனப் பிரதிநிதிகளுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, நிலுவைத் தொகையை மீட்க அதிகாரிகள் முயற்சிப்பார்கள்.

இலங்கையில் EPF ஊழியர்களின் பணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் - நிறுவனங்களுக்கு எச்சரிக்கை | Epf In Sri Lanka

இதற்குப் பின்னரும் நிறுவனங்கள் நிதி செலுத்தத் தவறினால், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அபராதத்துடன் கூடிய நிலுவைத் தொகை வசூலிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 22,450 நிறுவனங்கள் ஊழியர் சேமலாப நிதியைச் செலுத்துவதில் தவறிழைத்துள்ளதாக நிதி அமைச்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இவற்றின் மொத்த நிலுவைத் தொகை சுமார் 3,498 கோடி ரூபாவிற்கும் (ரூ. 34,989,162,957.81) அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.