ஆன்லைன் வகுப்புகளில் அம்மாக்களின் குறுக்கீடு! -வாசகியின் ஆதங்கம்
ஆன்லைன் வகுப்புகளில் நிகழும் அபத்தங்கள் பல. அவற்றில் ஒன்று குழந்தைகளுடன் சேர்ந்து அம்மாக்களும் மாணவர்களாக மாறிவிடுவது.
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
ஒரு மிகப்பெரிய பள்ளி வளாகமே இன்று ஒரு சின்ன கைப்பேசிக்குள் அடங்கிவிட்டது. ஆன்லைன் கிளாஸ், ஆன்லைன் அஸைன்மெண்ட், ஆன்லைன் டெஸ்ட் என சகலமும் ஒரு சின்னத்திரையில் சாத்தியமாகிறது. இதனால் குழந்தைகளுக்கு கிடைக்கும் நன்மை தீமைகளைப் பற்றி இன்று பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.
ஓலைச்சுவடிகள் எப்படி புத்தகங்களாக மாறியதோ அதேபோல் இன்று புத்தகங்கள் மென்பொருளாக மாறத் தொடங்கிவிட்டன.
காலத்திற்கு ஏற்ற மாற்றம் தேவைதான் என்றாலும் அந்த மாற்றத்தை முற்றிலும் உள்வாங்கிக்கொள்ள வேண்டிவர்கள் நம் பிள்ளைகள்.
Representational Image
"உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்ல
அவர்கள் காத்திருக்கும் எதிர்கால
வாழ்வின் மகன், மகள்கள்"
என்ற கலீல் ஜிப்ரானின் வரிகள்தான் இப்போது என் நினைவில் வருகிறது.
எதிர்காலத்துக்கான மாற்றத்தை முற்றிலும் புரிந்துகொள்ள வேண்டிவர்கள் அந்த எதிர்காலத்தில் வாழப்போகும் இன்றைய பிஞ்சுகள்.
ஆனால், இந்த ஆன்லைன் வகுப்புகளில் நிகழும் அபத்தங்கள் பல. அவற்றில் ஒன்று குழந்தைகளுடன் சேர்ந்து அம்மாக்களும் மாணவர்களாக மாறிவிடுவது.
ஆன்லைன் கிளாஸில் கைப்பேசியும் ஹெட்போன்ஸுமாக அமர்ந்திருக்கும் தங்கள் குழந்தையின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, குழந்தை காதில் ஒரு ஹெட்போன் தன் காதில் மற்றொரு ஹெட்போன் என இந்த அம்மாக்களின் ஊடுருவல் தடுக்க முடியாத ஒன்றாகிவிட்டது.
ஆசிரியர் குழந்தையிடம் கேள்வி கேட்டால், அதற்கு பதில் அம்மாவிடம் இருந்து வருகிறது. குழந்தைகளை நோட்ஸ் எடுக்கச் சொன்னால் அம்மாவின் கைகள் பரபரக்கிறது. ஒருவேளை பள்ளிகள் எப்போதும்போல நடந்திருந்தால் இப்படி அம்மாக்களும் வகுப்பறை சென்று உட்கார்ந்திருப்பார்களா என்ன?
தன் வீட்டைக் தாண்டிய உலகத்தை கற்கவே குழந்தைகள் பள்ளி செல்கின்றனர். இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் அது இயலாத ஒன்றாக உள்ளது. ஏதோ ஒரு சின்னத்திரையில் ஆசிரியரின் சின்ன உருவத்தைக் கண்டு முடிந்தவரை கவனிக்கும் அந்தக் குழந்தைக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு அவர்களின் கவனிக்கும் திறனை முற்றிலுமாக குறைத்துவிடுகின்றன இந்த அம்மாக்களின் செயல்கள். இன்று அவர்களின் சிறிய வகுப்புகளில் சேர்த்து அமரும் நீங்கள் நாளை அவர்களின் உயர் கல்வியிலும், நேர்முகத் தேர்வுகளிலும் சேர்த்து அமர முடியாது.
Representational Image
வெற்றியோ தோல்வியோ நல்லதோ கெட்டதோ அவற்றின் புரிதல் அவர்களுக்கானதாக இருக்கட்டும். அடிப்படையை சரியாக புரிந்துகொள்ளாத குழந்தைகளின் அஸ்திவாரங்கள் நாளை அவர்களின் வாழ்க்கை பெரிய கட்டடங்களாக மாறும்போது ஆட்டம் கண்டுவிடும். பெற்றோர்கள் இனி ஒருமுறை உங்கள் குழந்தையின் ஆன்லைன் கிளாஸில் சேர்த்து அமரும்போது சற்றே சிந்தியுங்கள்.
-விஜி குமரன்