தரைவழி தொலைபேசியில் இருந்து செல்போன் எண்ணுக்கு பேச புதிய நடைமுறை

தரைவழி தொலைபேசியில் இருந்து செல்போன் எண்ணுக்கு பேசும்போது, அந்த எண்களுக்கு முன்பாக ‘0’ சேர்க்க வேண்டும். இந்த நடைமுறை ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது.

லேண்ட்லைன் என்று அழைக்கப்படுகிற தரைவழி தொலைபேசியில் இருந்து எந்தவொரு செல்போன் எண்ணுக்கு பேச வேண்டும் என்றாலும் அந்த எண்களை ‘டயல்’ செய்வதற்கு முன்பாக முதலில் பூஜ்ஜியத்தை (0) சேர்த்து ‘டயல்’ செய்யும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய், மத்திய தொலைதொடர்பு துறைக்கு கடந்த மே மாதம் 29-ந்தேதி பரிந்துரை செய்திருந்தது.

 


இது, தொலைதொடர்பு சேவைகளுக்கு போதுமான எண்ணிக்கையிலான இடத்தை உருவாக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த பரிந்துரையை மத்திய தொலைதொடர்பு துறை இப்போது ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை அந்த துறை கடந்த 20-ந்தேதி வெளியிட்டுள்ளது.

தரைவழி தொலைபேசியில் இருந்து வாடிக்கையாளர்கள் செல்போன் எண்களை அழைத்து பேசுவதற்காக ‘0’ டயலிங் வசதி (எஸ்.டி.டி. வசதி) வழங்கப்பட வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியை தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள், தரைவழி தொலைபேசி சந்தாதாரர்களுக்கு செய்து தருவதற்கு ஜனவரி 1-ந்தேதி வரையில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே இந்த புதிய நடைமுறை ஜனவரி 1-ந்தேதி நடைமுறைக்கு வரும்.

இந்த புதிய நடைமுறையினால், செல்போன் சேவைக்கு புதிதாக 2,544 மில்லியன் கூடுதல் எண்களை உருவாக்க முடியும் என டிராய் கூறி உள்ளது.