மறு பிறவி

மறு பிறவி

கவுசிகாவின் கதையை உங்களிடம் சொல்ல வேண்டும் என முன்பே முடிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் நவீன் அனுமதிக்கவில்லை. அவர் கவுசியின் கணவர். கதையின் முதல் பகுதியை அவர்தான் எனக்குச் சொன்னார். 'இதை எழுதிடாதீங்க' என்ற உறுதியையும் வாங்கி இருந்தார். இரண்டாம் பகுதி எனக்கே தெரியும். எனக்கு மட்டுமில்லை. என்னைப் போலவே இன்னும் பலருக்கும் தெரியும். ஆனால் முதல் பகுதியைச் சொல்லாமல் இரண்டாம் பகுதியைச் சொல்வது சரியாக இருக்காது.

கவுசிக்கும் எனக்கும் ஒரே வயதுதான். பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது அவள் அறிமுகம். அறிமுகம் என்றால் பேசியது இல்லை. 'அந்தப் பொண்ணு  எவ்வளவு அழகு' என்று சித்தி பேசிக் கொண்டிருந்த போது ஜன்னல் வழியாக அவளைப் பார்த்ததோடு சரி. சித்தி வீட்டுக்குப் பின்னால் புதிதாகக் குடி வந்திருந்தார்கள். 

'டாக்டருக்கு படிக்கப் போறாளாம்' என்றார் சித்தி. தேர்வில் அவள் என்னைவிடவும் நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருந்தாள். ஆனால் மருத்துவப் படிப்பில் சேர்கிற அளவுக்கு இல்லை. பொறியியல் படிப்பில் சேர்ந்தாள். அவளும் நானும் வெவ்வேறு கல்லூரிகள். அதன் பிறகு அவளை  மறந்து போனேன்- நவீனைச் சந்திக்கும் வரையிலும்.  

கவுசியின் முதல் திருமணம்தான் கதையின் முதல் பகுதி. 

எங்கேயோ வெளிநாட்டில் பணியாற்றிய மாப்பிள்ளை ஒருவனுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள். வீடு வாசல் பார்த்து அக்கம் பக்கம் விசாரித்துச் செய்து வைத்த திருமணம்தான். ஆனால் நிலைக்கவில்லை. பதினைந்து நாட்களில் அங்கேயொரு ஏரியில் குதிக்கப் போனவளை யாரோ ஒரு  நல்ல மனுஷன் தடுத்துக் காப்பாற்றி விமானம் ஏற்றி வைக்க இந்தியா வந்து சேர்ந்திருக்கிறாள். அங்கே என்ன நடந்தது என்பதைத்தான் நவீன் சொல்லி இருந்தார். ஆயிரம் கனவுகளுடன் திருமணம் முடித்து விமானம் ஏறியவள் பதினைந்து நாட்களில் ஏரியில் விழப் போனாள் என்றால் வீரியத்தை கற்பனை செய்து கொள்ளலாம். இப்போதைக்கு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். எப்பொழுதாவது நவீன் அனுமதித்தால் அதை உங்களுக்குச் சொல்கிறேன். 

'கவுசிக்கு அப்புறம்தான் என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வந்துச்சு' என்றார் நவீன். 

'ரெண்டு வருஷம் வரைக்கும் அங்க என்ன நடந்துச்சுன்னு அவ யார்கிட்டயும் சொல்லல'. அவள் இதையெல்லாம் சொல்லுகிற பெண் இல்லை. வலி தமக்குள்ளாகவே இருக்கட்டும் என நினைத்திருக்கக் கூடும்.  'என்கிட்ட எதையும் கேக்காதீங்க' என வீட்டில் சொல்லிவிடடாளாம். வேலை ஒன்றைத் தேடிக் கொண்டு  அதில் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தாள். இரண்டு வருடங்களுக்குப் பிறகாக நவீன் வீட்டிலிருந்து அணுகி இருக்கிறார்கள். 

'அவங்க அம்மா அப்பாவுக்கு சம்மதம்தான். ஆனா அவ சம்மதிக்கலை...இப்படியே இருந்துக்கிறேன்னு சொல்லிட்டா' . நவீன் இதைச் சொல்லிக் கொண்டிருந்த போது அவர் பக்குவப்பட்ட மனிதராகத் தெரிந்தார். ஒரு பெண்ணை அவளது உணர்வுகளைச் சிதைக்காமல் எதிர்கொள்ளும் ஆண்கள் அரிது. ஆண்கள் என்ன ஆண்கள்? பெண்களே கூட அப்படி இன்னொரு பெண்ணை அணுகுவதில்லை. 

'நான் உங்க கூட பேசணும்' என்று அவர் அனுமதி கேட்ட போது சலனமில்லாமல் தலையை ஆட்டியிருக்கிறாள். அழுது நீர் வற்றிக் காய்ந்து கிடந்த மண் அவள். 

'உனக்கு வாழ்க்கை கொடுக்கறதா சொல்லிட்டு நான் வரல...உம்மேல சிம்பதியும் இல்ல...'

'ம்ம்ம்'

'யாருக்குத்தான் பிரச்சினை இல்ல? இதை இவன் தாங்குவான்னு  எங்கேயோ எழுதி இருக்கு...உன்னால தாங்க முடிஞ்சு இருக்குல்ல' 

அவள் எதுவும் பேசவில்லை.

'எங்க அம்மா அப்பாவுக்கும் சம்மதம்தான். நீ யோசிச்சு முடிவு சொல்லு'.  

                                                                        ***

நவீன்-கவுசிக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. இப்பொழுது இரண்டாவதாகப் பையன். முதல் குழந்தை பிறந்த அதே மருத்துவமனையில்தான் இரண்டாம் பிரசவத்தையும் பார்த்தார்கள். 'சென்டிமெண்டா இருக்கட்டும்' என கவுசி சொன்னாளாம். மருத்துவமனை அதேதான் என்றாலும் மருத்துவர்கள் மாறிவிட்டார்கள். கோயமுத்தூரில் மருத்துவமனைகள் கார்பொரேட்மயமாகி வெகு காலமாகிவிட்டது. அவைகளுக்கிடையில் இப்பொழுதெல்லாம் கடும் போட்டி. ஒரு பெரு மருத்துவமனையின் நிர்வாகம் கவுசி பிரசவம் பார்த்த மருத்துவமனையை விலைக்கு வாங்கி பெயர்ப்பலகையை மாற்றி மருத்துவர்களையும் மாற்றிவிட்டது.

'நான் நல்லா இருக்கேன். கொஞ்சம் வலி இருக்கு..நீங்க வர்றதுக்குள்ள ஆபரேஷன் பண்ணிடுவாங்கன்னு நினைக்கறேன். குட்டிப்பையனோ, குட்டிப் பொண்ணோ...உங்களுக்காக காத்திருக்கிறோம். சீக்கிரம் வந்து சேருங்க' என்று கவுசி சொன்னவுடன் நவீன் கிளம்பி பேருந்து ஏறியிருக்கிறார். பிரசவத்துக்காக குறிக்கப்பட்டிருந்த நாளை விடவும் ஒரு வாரம் முன்பாகவே வலி வந்துவிட்டது. 

சமீபமாக நவீனுக்கு மைசூரில் பணி. மலைப் பாதையில் பேருந்து மெல்ல இறங்கி கொண்டிருந்தது. 'பையன் பொறந்து இருக்கான் மாப்பிள்ளை' என்று திம்பம் தாண்டுவதற்குள் மாமனார் அழைத்துச் சொன்னார். படபடப்பு தணிந்து குளிர் கற்று நவீனின் முகத்தில் சிலுசிலுத்தது.

கவுசியை அறுவை அரங்கிலிருந்து வெளியே அழைத்து வந்தார்கள். 

நவீனை அழைத்துப் பேசினாள். 'சத்தி தாண்டிடீங்களா? சரி வாங்க'. அவளது குரலில் களைப்பு இருந்தது. அரை மயக்கத்தில் பேசினாள். 

கவுசியின் அம்மாவுக்குத்தான் என்னவோ வித்தியாசமாகப் பட்டது. 'என்னங்க பொண்ணு வெளுத்து இருக்கா' - அவரது குரலில் பதற்றம். கவுசியின் விரல்கள் கறுத்திருந்தன. அறுவையின் போது ரத்த இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இயல்பாக ஏற்படக் கூடிய இழப்புதான். ஆனால் அது நிற்கவே இல்லை. கவுசியின் முகம் வெளுக்க வெளுக்க மருத்துவமனை பதறத் தொடங்கியது.

அறுவை அரங்குக்குள் விவாதித்தார்கள். 'பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிடலாம்' என்று அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் சொல்லவும் அவசர ஊர்தி தயாரானது.

'நான் அவர் கூட பேசணும்' என்றாள் கவுசி.

'ஒன்னும் பிரச்சினை இல்லைங்க....நான் நல்லா இருக்கேன்...ஐசியுவுக்கு கொண்டு போறாங்க..நீங்க வந்துடுங்க'

'இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடுவேன் கவுசி..தைரியமா இரு' என்று நவீன் சொன்ன போது இருவருக்குமே கண்கள் கசிந்தது.

'நம்ம பையனைக் காட்டினாங்க...அப்படியே உங்கள மாதிரி இருக்கான்' இதைச் சொன்ன போது அவளது உதடுகள் உலர்ந்திருந்தன.

அவசர ஊர்தி விரைந்தது. 

                                                                   ***

நவீன் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார். கண்கள் வீங்கி இருந்தன.

'ஆயிரத்தில் ஒன்னு இப்படி ஏமாறும்ன்னு சொல்லுறாங்க..அந்த ஒன்னு கவுசி'. என்னிடம் ஆறுதல் சொல்ல சொற்கள் எதுவுமில்லை. அவளது முதல் திருமணம் குறித்து முன்பு நவீன் சொன்னதெல்லாம் நினைவில் வந்தன. 

'குழந்தையை இன்னும் ஆஸ்பத்திரியில்தான் வெச்சு இருக்காங்க...' என்றார். பால் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை அங்கே செய்திருந்தார்கள். 

'இதை இவன் தாங்குவான்னு  எங்கேயோ எழுதி இருக்கு. இல்லீங்களா?' என்றார். தன்னைச் சொல்கிறாரா தமது குழந்தையைச் சொல்கிறாரா என்று தெரியவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தேன்.

மரண வீட்டின் ஓலம் மனதைப் பிசைந்து கொண்டிருந்தது. கவுசியின் முதல் குழந்தை எதையும் உணராமல் வெறுமனே அழுது கொண்டிருந்தது.

உலக வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை ஏதோ அடித்து நொறுக்கிக் கொண்டிருப்பது போல இருந்தது. இந்தக் கதையை உங்களிடம் சொல்வது பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. அடுத்த வாரம் உங்களை வந்து பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

இருள் மெல்லக் கவ்விக் கொண்டிருந்தது. அவள் முகம் தாங்கிய பதாகை ஒன்று காற்றில் அசைந்து கொண்டிருந்தது.

(உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் புனைவாக்கப்பட்டது.)