பெங்களூருவில் இளம்பெண்ணுக்கு 2வது முறையாக கொரோனா பாதிப்பு

பெங்களூருவில் இளம்பெண் ஒருவருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:

 

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் அவர்களுக்கு மீண்டும் அந்த நோய் எளிதில் தாக்காது என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் மிகவும் அரிதாக சிலருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது. 

 

அவ்வகையில் பெங்களூருவைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளார் என அவருக்கு பரிசோதனை செய்த போர்ட்டிஸ் மருத்துவமனை இன்று தெரிவித்துள்ளது. குணமடைந்தவருக்கு மீண்டும் தொற்று ஏற்படுவது பெங்களூருவில் முதல் முறையாகும். 

உலகின் முதல் கொரோனா மறு தொற்று ஆகஸ்ட் 24 அன்று ஹாங்காங்கில் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் தெலுங்கானாவில் சமீபத்தில் 2 பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டதை சுகாதாரத்துறை மந்திரி உறுதி செய்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு, மும்பையைச் சேர்ந்த டாக்டர் ஒருவருக்கு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொற்று ஏற்பட்டிருக்கிறது.

 

ஹாங்காங் நோயாளிக்கு மறு தொற்று குறித்த அறிக்கை வெளியான பின்னர் கருத்து தெரிவித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இதுபற்றி பெரிதும் எச்சரிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியது. 

 

அதேசமயம், கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது இன்னும் தெரியவில்லை என்றும், அதனை நாம் கண்டறிய வேண்டும் என்றும் தெரிவித்தது.