அரசியலமைப்பு திருத்தம் மற்றும் இளம் பராய திருமண சட்டத்தை கைவிடுவது குறித்து அவதானம்
19 அரசியலமைப்பு திருத்தத்தினை இரத்து செய்தல் மற்றும் இளம் பராய திருமண சட்டத்தினை கைவிடல் என்பன தொடர்பில், மல்வத்து மாநாயகர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கண்டிக்கு சென்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயகர்களை சந்தித்த நீதியமைச்சர் அலி சப்ரி, அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக போதைப்பொருளில் இருந்து நாட்டை மீட்பது, சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக எவ்வாறு செயலாற்ற வேண்டும், இளம் பராய திருமணத்தை எவ்வாறு தடுப்பது போன்றவை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
அத்துடன் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு தேவையான சட்ட கட்டமைப்பை அமைத்து கொடுப்பது அவசியமாகவுள்ளது.
இந்த நிலையில், தங்களுக்கு பல சவால்கள் உள்ளதாவும், அவற்றை வெற்றிகொள்வதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகும் என்றும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.