திரிபோஷா உற்பத்திக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டை நீக்க புதிய நடவடிக்கை
நாட்டில் போஷாக்கு குறைபாட்டை நீக்கும் நோக்கில் விநியோகிக்கப்படும் திரிபோஷா உற்பத்தியைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக, 2026 ஆம் ஆண்டில் 15,000 மெட்ரிக் டொன் சோளத்தை இறக்குமதி செய்ய ஸ்ரீலங்கா திரிபோஷா லிமிடெட் நிறுவனத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான உயர்தர சோளத்தை உள்நாட்டு சந்தையில் போதியளவு பெற்றுக்கொள்ள முடியாமை காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தரமான மூலப்பொருட்கள் கிடைக்காமையால் உற்பத்தி நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சோள இறக்குமதியானது இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமம் மற்றும் தாவர இறக்குமதி அனுமதிப்பத்திரம் போன்ற பல ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
எனவே, காலதாமதமின்றி சோளத்தை இறக்குமதி செய்வதற்காக விவசாய அமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர்கள் இணைந்து விசேட நடைமுறை ஒன்றை தயாரித்துள்ளனர்.
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வர்த்தக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த கூட்டு அமைச்சரவைப் பத்திரத்திற்கே இவ்வாறு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதன்படி, 2026 ஆம் ஆண்டில் திரிபோஷா உற்பத்திகள் எவ்விதத் தடையுமின்றி முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.