சுற்றுலா பேருந்தில் இரு மாணவிகளுடன் மூன்று மாணவர்கள் போதையில் செய்த செயல் ; வைத்தியசாலையில் அனுமதி
கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் உள்ள இரண்டு அரச பாடசாலைகளில் தரம் 13இல் கல்வி கற்கும் ஐந்து மாணவ, மாணவிகள் ‘மதன மோதகம்’ போதை உருண்டைகளைச் சாப்பிட்டமையால் சுகவீனமுற்று, நவம்பர் 27ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் 17 வயதுடைய மூன்று மாணவர்களும் இரண்டு மாணவிகளுமாவர். இவர்கள் குறித்த பாடசாலைகளின் உயர்தரப் பிரிவில் கல்வி கற்று வருபவர்களாவர்.

விசாரணை
உயர்தரப் பரீட்சைக்குரிய ஆறு மாத கால தொழிற்பயிற்சி நிறைவடைந்ததையடுத்து, மிஹிந்தலை வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தின் அனுமதியுடன் வலயத்திலுள்ள அனைத்து மாணவர்களும் கல்விச் சுற்றுலாவுக்காகப் பேருந்தில் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது, பேருந்துக்குள் ஆசிரியர்களுக்குத் தெரியாமல் இந்த ஐந்து மாணவ, மாணவிகளும் ‘மதன மோதகம்’ போதை உருண்டைகளை உட்கொண்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
பேருந்து கலென்பிந்துனுவெவயிலிருந்து மிஹிந்தலை நகரை வந்தடைந்தபோது, போதை உருண்டைகளைச் சாப்பிட்ட ஐவரும் வாந்தியெடுத்துச் சுகவீனமுற்றதையடுத்து, ஆசிரியர்களால் மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மிஹிந்தலை பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின்போது, சுகவீனமுற்றிருந்த 17 வயதுடைய மாணவன் ஒருவன் வசமிருந்த மேலும் நான்கு ‘மதன மோதகம்’ போதை உருண்டைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த மாணவனிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், கலென்பிந்துனுவெவ பிரதேசத்திலுள்ள கடையொன்றிலிருந்து 2,500 ரூபாய் பணம் செலுத்தி இவற்றைக் கொள்வனவு செய்ததாக அவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
இதேவேளை, போதை உருண்டைகளைச் சாப்பிட்டமையால் ஆபத்தான நிலையிலிருந்த ஒரு மாணவன் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
‘மதன மோதகம்’ போதை உருண்டைகளைக் கொண்டு வந்த 17 வயதுடைய மாணவன், நவம்பர் 28ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.