யாழில் பென்ஸ் காரில் ஆயுதங்களுடன் சிக்கிய இருவருக்கு அதிரடி உத்தரவு!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் சொகுசு பென்ஸ் காரில் வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வீதிச் சோதனையில் சிக்கிய சந்தேகநபர்கள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சாவகச்சேரி பகுதியில் காவல்துறையினர் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த பென்ஸ் ரக சொகுசு காரை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது குறித்த காருக்குள் வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் காணப்பட்டுள்ளன.
இதனையடுத்து காரில் பயணித்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
14 நாட்கள் விளக்கமறியல்
கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், நவம்பர் 12ஆம் திகதி சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர்.
இதன்போது இருவரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், குறித்த பென்ஸ் ரக சொகுசு கார் மற்றும் அதற்குள் இருந்து மீட்கப்பட்ட பொருட்களையும் சான்றுப் பொருட்களாக நீதிமன்றத்தில் காவல்துறையினர் சமர்ப்பித்துள்ளனர்.
அவற்றை நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கார் தொடர்பில் விசாரணை
இதேவேளை, குறித்த சொகுசு கார் இளவாலை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்குச் சொந்தமானது எனத் தெரிவிக்கப்படுகிறது.
அந்தப் பெண் நாளொன்றுக்கு 8,000 ரூபாய் வீதம் சந்தேகநபர்களுக்கு காரை வாடகைக்கு வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கார் உரிமையாளர் மற்றும் வாகனம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.