மனிதர்களுக்கான சிகிச்சை மூலம் புற்றுநோயிலிருந்து குணமடைந்த மலைப்பாம்பு
இங்கிலாந்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள Chester Zooவில் பராமரிக்கப்பட்டு வரும் ஜோடி ஃபோஸ்டர் (Jodie Foster) என்ற பெயருடைய 15 அடி நீளமுள்ள ரெட்டிகுலேட்டட் பைத்தன் பாம்புக்கு, மனிதர்களுக்குப் பயன்படுத்தப்படும் நவீன புற்றுநோய் சிகிச்சை முறையைப் பயன்படுத்தி வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
23 வயதுடைய இந்தப் பாம்பின் பசியும் உடல் இயக்கமும் குறைந்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அதன் தாடைப் பகுதியில் Fibrosarcoma எனப்படும் வீரியம் மிக்க புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
முதலில் அறுவைச் சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்ட போதிலும், பின்னர் அது மீண்டும் தோன்றி தாடை எலும்புப் பகுதிக்குள் பரவத் தொடங்கியது.
இதையடுத்து, Chester Zoo கால்நடை மருத்துவக் குழுவினர், அருகிலுள்ள Liverpool பல்கலைக்கழக புற்றுநோய் நிபுணர்களுடன் இணைந்து, மனிதர்களுக்கு பயன்படுத்தப்படும் Electrochemotherapy என்ற சிகிச்சை முறையை பாம்புக்கு ஏற்ப மாற்றி சிகிச்சை அளித்தனர்.
உலகில் முதன்முறையாக ஒரு பாம்புக்கு இந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக நம்பப்படுவதுடன், ஜோடி தற்போது சிறப்பான முறையில் குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.