செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிட சர்வதேச இராஜதந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு : சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி பகுதிக்கு செல்வதற்கு சர்வதேச இராஜதந்திரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் இது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப்புதைகுழிக்கு செல்வதற்கு ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவுக்கு அனுமதியளித்த அரசாங்கம் கனடா உயர்ஸ்தானிகருக்கும், அவரது குழுவினருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அவுஸ்ரேலியா நாட்டுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (21) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
சோமரத்ன ராஜபக்ச தெரிவிப்பு
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணியை அண்மித்த பகுதியிலும் ஆட்கள் அடித்து கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டுள்ளார்கள் என்று மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சோமரத்ன ராஜபக்சவை செம்மணிக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில் முன்னெடுக்கவில்லை. அரசாங்கம் இந்த விடயத்தில் பின்வாங்குகிறது.
செம்மணியில் மனித பேரவலம் நடந்துள்ளது. பலர் அடித்து கொல்லப்பட்டுள்ளார்கள். கூட்டாக புதைக்கப்பட்டுள்ளார்கள். சிறுவர்களின் எலும்புகூடுகளும் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் 12 வயதுக்குட்பட்டவர்கள் என்று அறியப்படுகிறது. இவர்கள் என்ன செய்தார்கள். ஆயுதம் ஏந்திப் போராடினார்களா, ஏன் அவர்கள் மோசமாக அடித்துக் கொல்லப்பட்டார்கள்.
அகழ்வுப் பணிகள்
செம்மணி மனிதப் புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் 110 நாட்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் காணப்பட்டால் அரசாங்கம் நீதிமன்ற உத்தரவுடன் நிதி ஒதுக்க வேண்டும்.
அரசாங்கத்திடம் நிதி இல்லையாயின் இந்தியா, அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளுடன கலந்துரையாடி அரசாங்கம் நிதி கோர வேண்டும். தென்னாபிரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பை பெற்று, பணிகளை தொடர்ந்து அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

செம்மணி மனிதப்புதை குழி விவகாரத்தில் அரசாங்கம் இதயச்சுத்தியுடன் வெளிப்படையாக செயற்பட வேண்டும். அரசாங்கம் மந்தகரமாகவே செயற்படுகிறது. செம்மணி மனித புதைகுழியின் மதிலை தாண்டிய பகுதிகளிலும் மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவுடன் சோமரத்ன ராஜபக்சவை செம்மணிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு அவர் காண்பிக்கும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். உண்மையை வெளிக்கொண்டு வர அரசாங்கம் நீதியுடன் அணுக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்“ என தெரிவித்தார்.