நிலச்சரிவில் மாயமானவர்களை கண்டுபிடிக்க பள்ளத்தாக்கு பகுதியில் தேடுதல் பணி
வயநாட்டில் கடந்த 30-ந்தேதி அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை கிராமங்களும் உருக் குலைந்தன.
அந்த பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்ததால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. மண்ணுக்குள் பலர் உயிரோடு புதைந்துவிட்ட நிலையில், ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். மேலும் பலர் காணாமல் போனார்கள். அவர்களை தேடும் பணியில் ராணுவத்தின் முப்படைகளை சேர்ந்த வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார் என 11 பிரிவுகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டார்கள்.
இதில் மண்ணுக்குள் புதைந்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. பலியானர்களின் உடல்கள் சிதைந்தும், துண்டு துண்டா கிய நிலையிலும் மீட்கப்பட்டன. மீட்பு பணி நேற்று 7-வது நாளாக நீடித்த நிலையில் பலியானர்களின் எண்ணிக்கை 400-ஐ தொட்டது.
மேலும் மாயமாகியிருக்கும் 200பேரை தேடும் பணி தொடர்கிறது. அவர்களை கண்டுபிடிக்க நவீன ராடர்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட கருவிகள், ஹெலிகாப்டர்கள், மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டன.
மாயமானவர்கள் அனைவரையும் மீட்கும் நடவடிக்கையில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது தேடுதல் பணி இன்று 8-வது நாளாக நடந்தது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள், சாலியாறு மற்றும் ஆற்றின் கரையோர பகுதிகளில் முழுமையாக தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.அங்கு ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், போலீசார், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர் வழக்கம்போல் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் யாரேனும் கிடக்கிறார்களா? என்பதை கண்டறிய மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்த பகுதிகள் மட்டு மின்றி மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத பள்ளத்தாக்கு பகுதியில் இன்று தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. அதாவது சூச்சிப்பாறை மற்றும் பொதுக்கல்லு என்ற பகுதிகளுக்கு இடையில் தான் அந்த பள்ளத்தாக்கு இருக்கிறது.
அந்த இடத்துக்கு ராணுவம் மற்றும் வனத்துறையினர் திறமைவாய்ந்த வீரர்கள் 12 பேர் ஹெலிகாப்டர் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். சன்ரைஸ் என்று அழைக்கப்படும் அந்த பள்ளத்தாக்கு மற்றும் அதன் கரையோர பகுதிகளில் அவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
பள்ளத்தாக்கு பகுதியில் யாரேனும் இறந்து கிடக்கிறார்களா? என்று பார்க்கப்பட்டது. மேலும் பள்ளத்தாக்கில் யாரேனும் இறந்துகிடந்தால், அவர்களது உடலை ஹெலிகாப்டர் மூலமாக கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காட்டாற்று வெள்ளத்தில் வேகமாக அடித்துச் செல்லப்பட்டவர்கள் இந்த பள்ளத்தாக்கில் பிணமாக கிடக்கலாம் என்று கருதப்படுவதால் பல உடல்கள் இன்று கண்டெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் வழக்கமான பகுதிகளில் இன்று மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 400-ஐ தாண்டியது.