கேரளாவில் அடுத்த ஊரடங்கு குறித்து முடிவெடுக்க அமைச்சரவை கூடுகிறது!

கேரளாவில் அடுத்த ஊரடங்கு குறித்து முடிவெடுக்க அமைச்சரவை கூடுகிறது!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கேரளா முழுவதும் முழு ஊரடங்கை அமுல்படுத்துவது குறித்து எதிர்வரும் 27ஆம் திகதி  மாநில அமைச்சரவை தீர்மானிக்கவுள்ளது.

இது குறித்து நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில்,  கேரளா முழுவதும் 3 அடுக்கு ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கை அமுல்படுத்துவதா என்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி  வெளியிட்டுள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று, ஒற்றை இலக்கத்தில் இருந்தது.  கடந்த மாதம் முழுவதும் புதிய வைரஸ் தொற்று 100-ஐ தாண்டாமல் கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த சில வாரங்களாக வைரஸ் தொற்று ஆயிரத்தை நெருங்கி வருகிறது.  கடந்த 22ம் திகதி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இது கேரள மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தலைநகர் திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் 3 அடுக்கு ஊரடங்கு அமலில் உள்ள அதேவேளை இந்தப் பகுதிகளில் பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் வரும் 28ம்திகதி வரை இந்த 3 அடுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.