குஜராத்தில் கார் மீது லாரி மோதி 9 பேர் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்

குஜராத்தில் கார் மீது லாரி மோதி 9 பேர் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்

குஜராத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்துக்கு உட்பட்ட வார்தெஜ் பகுதியை சேர்ந்த சிலர் மராட்டிய மாநிலத்துக்கு சென்று விட்டு காரில் சொந்த ஊர் சென்று கொண்டிருந்தனர். இவர்களது கார் நேற்று காலையில் ஆனந்த் மாவட்டத்தின் இந்திரனாஜ் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒரு சரக்கு லாரி வந்து கொண்டிருந்தது.

எதிர்பாராத நேரத்தில் அந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி மரண ஓலம் எழுப்பினர்.

உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து காரில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டனர்.

ஆனாலும் இந்த சம்பவத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இதில் 2 பேர் குழந்தைகள் ஆவர். மேலும் 5 பேர் பெண்கள் ஆவர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கார் மீது சரக்கு லாரி மோதியதில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் குஜராத்தில் நேற்று பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

இதைப்போல உள்துறை மந்திரி அமித்ஷா, முதல்-மந்திரி விஜய் ரூபானி ஆகியோரும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து இருந்தனர்.