உயிரைக் காவு கொள்ளும் பயணத்தை மீண்டும் ஆரம்பித்த கொரோனா! முன்னாள் சபாநாயகர் விடுத்துள்ள கோரிக்கை

உயிரைக் காவு கொள்ளும் பயணத்தை மீண்டும் ஆரம்பித்த கொரோனா! முன்னாள் சபாநாயகர் விடுத்துள்ள கோரிக்கை

புதிய அரசியலமைப்பை முன்னிறுத்தி சமூகம் பிளவுபடுமாக இருந்தால், கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ளதைப் போன்ற மற்றுமொரு அனர்த்தத்தை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய எச்சரித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம் தொடர்பில் மக்கள் மத்தியில் இடம்பெற்ற பொது விவாதம் அவர்களைத் திசைதிருப்பிவிட்டதுடன் அதற்கு மத்தியில் கொரோனா வைரஸ் உயிரைக் காவுகொள்ளும் அதன் பயணத்தை மீள ஆரம்பித்துவிட்டது.

புதிய அரசியலமைப்பை முன்னிறுத்தி சமூகம் பிளவுபடுமாக இருந்தால், இதனையொத்த மற்றுமொரு அனர்த்தத்தை எதிர்கொள்ள வேண்டியேற்படும்.

எனவே அனைத்துத் தலைவர்களும் ஒன்றுபட வேண்டிய தருணம் இதுவேயாகும். மாறாக பிரிவினை கொள்கையுடையவர்களைத் திருப்திப்படுத்த முயற்சிக்கக்கூடாது. உயிர்வாழ்தலே தற்போது முன்னுரிமைக்குரிய விடயமாகும்.

மேலும் தற்போது கொரோனா வைரஸ் நோயாளர்கள் மற்றும் அதனால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், மக்களின் பாதுகாப்பே அரசாங்கத்தின் அக்கறைக்குரிய விடயமாக இருக்கவேண்டும்.

பதற்றத்தில் பொருட்களை முண்டியடித்துக் கொள்வனவு செய்வதைத் தவிர்ப்பதற்கு மக்கள் மத்தியில் அத்தியாவசியப் பொருட்களை முறையாகப் பகிர்ந்தளிப்பது அவசியமாகும். அத்தோடு ஒவ்வொருவரும் தமது சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் கவனத்துடன் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.