303 ஓட்டங்கள் பின்தங்கியுள்ள இலங்கை அணி!

303 ஓட்டங்கள் பின்தங்கியுள்ள இலங்கை அணி!

சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று (28) ஆரம்பமாகவுள்ளது.

மூன்றாம் நாள் ஆட்டமுடிவில், தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 15 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அதற்கமைய, அவர்கள் மேற்கிந்திய தீவுகள் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 303 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளனர்.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 308 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அதில் தனஞ்சய டி சில்வா 120 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 54 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜஸ்டின் கிரீவ்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 626 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது தனது இன்னிங்ஸை இடைநிறுத்திக்கொள்ள தீர்மானித்தது.

அணியின் சார்பாக அமீர் ஜங்கு 233 ஓட்டங்களையும், தலைவர் ரோஸ்டன் சேஸ் 194 ஓட்டங்களையும் குவித்தனர்.

அவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டுக்காக 401 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டனர். இது டெஸ்ட் போட்டி வரலாற்றில் 6ஆவது விக்கெட்டுக்காகப் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகப் பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னர் இங்கிலாந்து துடுப்பாட்ட ஜோடியான பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜொனி பெயர்ஸ்டோ ஆகியோர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகப் பெற்ற 399 ஓட்டங்களே இந்த விக்கெட்டுக்கான அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகக் காணப்பட்டது.

இதேவேளை, ரோஸ்டன் சேஸ் மற்றும் அமீர் ஜங்கு ஆகியோர் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக 6ஆவது விக்கெட்டுக்காக பிரையன் லாரா மற்றும் ரிட்லி ஜேகப்ஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து பெற்றிருந்த 282 ஓட்டங்கள் என்ற சாதனையை இப்போட்டியில் முறியடித்துள்ளனர்.

பந்து வீச்சில் மிலான் ரத்நாயக்க ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.