களுத்துறை மாவட்டத்தின் பதுகம பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகள் மீளத் திறப்பு..!!
களுத்துறை மாவட்டத்தில் மத்துகம பிரதேச செயலகத்தில் பதுகம புதிய கொலனி பிரதேசத்தை தவிர அங்கு தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட ஏனைய பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்ர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 17 ஆம் திகதி மதுகம பிரதேச செயலாளர் பிரிவில் 17 பேர் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து அந்த பகுதிகளை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, இன்றிரவு முதல் மேல் மாகாணத்தில் அமுலாக்கப்படவுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக மேல்மாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வதை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதற்கான நடவடிக்கைகள் வெளிமாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகள் மூலமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைவாக அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை ஆயிரத்து 235 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் இதுவரை 177 வாகனங்களும் காவற்துறையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.