றாகமை வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர்
றாகமை வைத்தியசாலையில் இருந்து கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
கொரோனா தொற்றாளர்களை குற்றவாளிகளாக அடையாளப்படுத்தவோ அல்லது அவர்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தவோ ஒருபோதும் நடவடிக்கை எடுப்பதில்லை என அவர் குறிப்பிட்டார்.
எனினும், றாகமை வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவில் இருந்து கொரோனா நேற்று முதியவர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், தற்போது கிடைத்துள்ள அறிக்கைகளின்படி அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
ஆகவே, குறித்த நபரை எங்கேணும் கண்டால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அந்த நபர் உடனடியாக கைது செய்யப்படாவிட்டால் பாரிய பாதிப்பு ஏற்படக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், சுதுவெல்ல கொரோனா தொற்று பரவல் போன்று மினுவாங்கொடை கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டு மக்களின் நன்மை கருதியே குறித்த கொரோனா தொற்றாளரின் படத்தை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.