வான்பாயும் 26 நீர்த்தேக்கங்கள்: பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்!
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள 16 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 10 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
தற்போது, அநுராதபுரம் – ராஜாங்கனை நீர்த்தேக்கம், பதுளை -சொரபொர நீர்த்தேக்கம், அம்பாந்தோட்டை – வீரவில, லூணுகம்வெஹெர, வெஹெரகல நீர்த்தேக்கங்கள், குருநாகல் – மாகல்ல மற்றும் தெதுருஓயா நீர்த்தேக்கங்கள், கண்டி மற்றும் மாத்தளை – வமெடில்ல, நாலந்தா நீர்த்தேக்கங்கள், மொனராகலை – அலிகொடஆர நீர்த்தேக்கம் என்பன வான்பாய்கின்றன.
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 12 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக விநாடிக்கு 18, 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அதேநேரம், பெய்து வரும் மழை காரணமாக லூணுகம்வெஹெர, திஸ்ஸவாவி, வீரவில, யோதவாவி மற்றும் அலிகொடஆர ஆகிய நீர்த்தேக்கங்கள் வான்பாய்கின்றன.
லூணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் திறக்கப்பட்டு விநாடிக்கு 7, 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதேவேளை, வெஹெரகல நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. விநாடிக்கு 2,400 கன அடிக்கும் அதிகமான நீர் மாணிக்க கங்கைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
அங்கமுவ, போபுருஎல்ல, மஹாசியம்பலாங்கமுவ, சத்தாதிஸ்ஸ, மாலிம்பொத்த மற்றும் மரதமடு ஆகிய நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து கொண்டிருக்கின்றன.
மழைவீழ்ச்சி தொடர்ந்து அதிகரிக்குமாயின், வான் கதவுகள் திறக்கப்படும் அளவு மேலும் அதிகரிக்கப்படலாம். எனவே, குறித்த நீர்த்தேக்கங்களைச் சூழவுள்ள பகுதிகளில் வசிப்பவர்களும், தாழ்நிலப் பிரதேசங்களில் வாழும் மக்களும் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் அறிவுறுத்தியுள்ளார்.