ஒரு லட்சம் ஆண்டுகள் தனிமை: மனிதப் பரிணாம வரலாற்றை மாற்றியமைக்கும் ஆப்ரிக்க மரபணு ஆய்வு

ஒரு லட்சம் ஆண்டுகள் தனிமை: மனிதப் பரிணாம வரலாற்றை மாற்றியமைக்கும் ஆப்ரிக்க மரபணு ஆய்வு

தெற்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த மனிதர்கள் சுமார் 100,000 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்திருக்கலாம் என்று புதிய பரந்த மரபணுப் பகுப்பாய்வு (genetic analysis) தெரிவிக்கிறது.

நவீன மனித இனத்தின் (Homo sapiens) தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த நமது புரிதலை முழுமையாக மாற்றியமைக்கும் வகையிலான புதிய மரபணு ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தெற்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஒரு குறிப்பிட்ட மனிதக் குழு, சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள் உலகின் பிற பகுதிகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் தனித்து வாழ்ந்ததாக 'நேச்சர்' (Nature) இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

ஸ்வீடனின் உப்சாலா பல்கலைக்கழக விஞ்ஞானி மாத்தியாஸ் ஜாகோப்சன் தலைமையிலான குழு, 225 முதல் 10,275 ஆண்டுகள் பழமையான 28 பண்டைய மனிதர்களின் மரபணுக்களைப் பகுப்பாய்வு செய்தது. இதில், 1,400 ஆண்டுகளுக்கு முன்பு வரை தெற்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த மனிதர்களின் மரபணுக்கள், இன்று வாழும் எந்த மனித இனத்திலும் காண முடியாத அளவிற்கு முற்றிலும் தனித்துவமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வெறும் புவியியல் தூரம் மட்டுமே இந்தத் தனிமைக்குக் காரணமல்ல. இந்தப் பழங்குடி மக்கள் வாழ்ந்த இடத்திற்கு வடக்கே உள்ள ஜாம்பசி நதிப் பகுதி, விவசாயத்திற்கும் இடப்பெயர்ச்சிக்கும் தகுதியற்ற கடினமான நிலப்பரப்பைக் கொண்டிருந்ததே இதற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்தத் தனிமை கி.பி. 550 வரை நீடித்தது, அதன் பிறகே வடக்கிலிருந்து வந்த விவசாயிகளுடன் மரபணுக் கலப்பு நிகழ்ந்துள்ளது.

ஆச்சரியப்படும் விதமாக, அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்த தெற்கு ஆப்ரிக்கர்கள் மட்டுமே ஒட்டுமொத்த மனித மரபணு மாறுபாடுகளில் பாதியைக் கொண்டிருந்தனர். உலகின் மற்ற அனைத்து மக்களும் மீதிப் பாதியை மட்டுமே பகிர்ந்து கொள்கின்றனர். நியூரான்களின் வளர்ச்சி மற்றும் சிறுநீரக செயல்பாட்டை ஒழுங்குபடுத்தும் தனித்துவமான மரபணு மாறுபாடுகள் இவர்களிடம் இருந்துள்ளன. இது நியண்டர்தால்களை விட இவர்களுக்கு அதிக அறிவாற்றலை வழங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. நவீன மனிதன் என்பது ஒரே இடத்தில் உருவான இனம் அல்ல; மாறாக, இப்போது நம்மிடம் இல்லாத பல வகையான பண்டைய மரபணுப் பண்புகளின் கலவையால் உருவானது என்ற கருத்தை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

இந்தத் தனித்துவமான மரபணுக் குறியீட்டிற்கு விஞ்ஞானிகள் "பண்டைய தெற்கு ஆப்பிரிக்க மூதாதையர் கூறு" (Ancient Southern African Ancestry Component) என்று பெயரிட்டுள்ளனர். மனிதப் பன்முகத்தன்மையின் ஒரு பெரிய பகுதி வரலாற்றில் மறைந்துவிட்டதையும், அத்தகைய இழந்த கண்ணிகளை மீட்க இந்த ஆய்வு ஒரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளதாகவும் ஆய்வாளர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.