“எமது நாடு எமது கைகளில்” மஹிந்த தலைமையில் இடம்பெறவுள்ள விழா!

“எமது நாடு எமது கைகளில்” மஹிந்த தலைமையில் இடம்பெறவுள்ள விழா!

சர்வதேச சிறுவர் தினமான இன்று “எமது நாடு எமது கைகளில்” என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் இம்முறை தேசிய சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது.

எனினும், ஸ்ரீலங்காவில் சிறுவர் தின தேசிய விழா நாளை நடைபெற உள்ளதாக ராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் பத்தரமுல்ல அபே கமவில் தேசிய சிறுவர் தின விழா இடம்பெறவுள்ளது.

இதேவேளை, நாட்டின் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

சர்வதேச முதியோர் தினமும் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேசிய சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வெளியிட்டுள்ள செய்தியில், சிறுவர்களை அறிவுசார் ரீதியில் வளப்படுத்தி அவர்களின் திறன் விருத்திக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுப்பது முழு சமூகத்தினதும் பொறுப்பு என கூறியுள்ளார்.

சிறந்த நாடொன்றை கட்டியெழுப்ப சிறுவர் தலைமுறையை நல் ஒழுக்கம் உடையவர்களாகவும், தொழிநுற்ப திறன்கள் மற்றும் மொழி அறிவில் மேம்பட்டவர்களாகவும் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேவேளை சிறுவர்கள் ஒழுங்கான முறையில் வழி நடத்தப்படுகின்றார்கள் என்பதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு அனைவருடையது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

அனைத்து சிறுவர்களுக்கும் அவசியமான ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் இலவசக் கல்வியை உறுதிப்படுத்த அரசாங்கம் உறுதிகொண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறுவர்கள் தொடர்பான சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் குமாரி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் அவசியப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.