காத்தான்குடியில் கட்டிடம் ஒன்றில் பாரிய தீ விபத்து!

காத்தான்குடியில் கட்டிடம் ஒன்றில் பாரிய தீ விபத்து!

மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் நேற்றிரவு (26) ஏற்பட்ட பாரிய தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விபத்தினால் பெருமளவிலான சொத்துச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தீப்பரவல் குறித்துத் தகவல் அறிந்தவுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி நகரசபை மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்புப் படையினர், காத்தான்குடி பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டனர்.


தீயணைப்புப் படையினரின் கடும் போராட்டத்தின் பயனாகத் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சம்பவ இடத்தில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இந்த தீ விபத்து காரணமாகக் குறித்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததுடன், மட்டக்களப்பு - கல்முனை வீதியூடான போக்குவரத்துச் சேவைகளும் பாதிக்கப்பட்டிருந்தன. இதனால் வாகனங்களை மாற்று வீதிகளின் ஊடாகச் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டனர்.


தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-