
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக சி.ஐ.டி.க்கு புதிய முறைப்பாடு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் (சி.ஐ.டி) முறைப்பாடொன்றை அளிக்க தீர்மானித்துள்ளதாக கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
குறித்த முறைப்பாட்டை கத்தோலிக்க அமைப்பின் தலைவர் சிரந்த அமரசிங்க இன்று (புதன்கிழமை) பிற்பகல் பதிவு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாகபே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த வருடம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினால் நடத்தப்பட ஈஸ்டர் தாக்குதல் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தன.
மேலும் கடந்த அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் அசமந்தப்போக்காக செயற்பட்டதன் காரணமாகவே ஈஸ்டர் தாக்குதல் நிகழ்ந்ததாகவும் பாரிய உயிர் சேதத்தை எதிர்கொள்ள நேரிட்டதாகவும் தொடர்ந்து குற்றம் சுமத்தப்படுகின்றது.
அதிலும், மைத்திரிபால சிறிசேனவிடமே பாதுகாப்பு அமைச்சின் பொறுப்புக்கள் காணப்பட்டதாகவும் இந்த தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே அறிவிப்பு கிடைக்கப்பெற்றும் எந்ததொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கவில்லை எனவும் முக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் சிலரினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சிலர் முறைப்பாட்டை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே, மைத்திரிபால சிறிசேன மீது குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ( சி.ஐ.டி) முறைப்பாடொன்றை பதிவு செய்யப்போவதாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.