சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்தது

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்தது

சென்னையில் புதிதாக 1,484 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் அங்கு இதுவரை 316 போ் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுக்கடங்காது செல்கிறது. அதிலும் தமிழகத்தில் இந்த வைரஸின் பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. குறிப்பாக சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பரவலைத் தடுக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையிலும், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

சென்னையில் தொடக்கத்தில் இருந்தே ராயபுரம், தண்டையாா்பேட்டை, கோடம்பாக்கம், திருவிக நகா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், அம்பத்தூா், அடையாறு, திருவெற்றியூா் ஆகிய 10 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் 9,451 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து தற்போதைய நிலைவரப்படி, பாதிப்பு எண்ணிக்கை 30,444ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் அதிகபட்சமாக 1,484 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை இந்த வைரஸ் தொற்று காரணமாக சென்னையில் மாத்திரம் இதுவரையில், 316 போ் உயிரிழந்துள்ளனர்.

இதேநேரம் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 321,626 ஆக உயர்ந்துள்ளது. அத்தோடு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,199 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, இந்த தொற்றிலிருந்து இதுவரை 162,326 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன், 150,101 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.