பெங்களூருவில் கடந்த 4 மாதத்தில் முக கவசம் அணியாதவர்களிடம் ரூ.2½ கோடி அபராதம் வசூல்

பெங்களூருவில் கடந்த 4 மாதத்தில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.2½ கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. விதிமுறை மீறியவர்களில் வாலிபர்களே அதிகம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதுபோல, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.

பெங்களூருவில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க மாநகராட்சி சார்பில் மார்ஷல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்ந்து போலீசாரும் அபராதம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மாநகராட்சி மார்ஷல்கள் நகரின் ஒவ்வொரு பகுதிக்கும், கடைகள், மார்க்கெட்டுகளுக்கும் சென்று முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, பெங்களூருவில் கடந்த 4 மாதத்தில், அதாவது கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து கடந்த 23-ந் தேதி (நேற்று முன்தினம்) வரை நகரில் முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களிடம் இருந்து ஒட்டு மொத்தமாக ரூ.2½ கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 767 பேரிடம் இருந்து இந்த அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு நகரில் உள்ள 8 மண்டலங்களில் மாநகராட்சி மார்ஷல்கள் நடத்திய சோதனையின் மூலம் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து இந்த அபராதம் வசூலிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக பெங்களூரு தெற்கு மண்டலத்தில் தான் அதிகளவில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது. அந்த மண்டலத்தில் மட்டும் முக கவசம் அணியாமல் சுற்றிய 40 ஆயிரத்து 889 பேரிடம் இருந்து ரூ.81 லட்சத்து 78 ஆயிரம் அபராதம் வசூலாகி உள்ளது.

இந்த நிலையில், பெங்களூருவில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக செயல்பட்டவர்களில் வாலிபர்களே அதிகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பெங்களூரு நகரில் 20 முதல் 30 வயது உடையவர்கள் தான் முக கவசம் அணிவதில்லை என்றும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் அலட்சியமாக சுற்றி திரிவதாகவும், அவர்களிடம் இருந்து தான் அதிகளவில் அபராதம் வசூலாகி இருப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகள தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் கூறுகையில், மக்களின் அலட்சியம் காரணமாக தான் கொரோனா பரவல் பெங்களூருவில் அதிகரித்துள்ளது. முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் மக்கள் அலட்சியம் காட்டுகின்றனர். இது கொரோனா பரவல் அதிகரிக்க முக்கிய காரணமாகும். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது, என்றார்.