அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்யும் விவகாரத்தில் அதிபர் டிரம்ப் திடீரென தனது முடிவை மாற்றி கொண்டார்.
சீனாவின் டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அந்த செயலிகளுக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் கடந்த மாதம் கையெழுத்திட்டார்
இந்த தடை உத்தரவின் படி டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டேன்ஸ் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்க வேண்டும். அதனைத் தொடர்ந்து டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் ஆகஸ்ட் 20 முதல் தடை விதிக்கப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
இதற்கான ஆணையை அமெரிக்க வர்த்தகத்துறை வெளியிட்டு இருந்தது. அதாவது எந்தவொரு ஆப் ஸ்டோரிலும் இந்த செயலிகள் பதிவிறக்கம் செய்யப்படுவது நிறுத்தப்படும் என அமெரிக்க வர்த்தகத்துறை குறிப்பிட்டு இருந்தது.
இந்நிலையில், முக்கிய திருப்பமாக டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதிக்கப்பட்ட தடையை ஒருவாரத்திற்கு தள்ளிவைப்பதாக அமெரிக்க வர்த்தக்த்துறை தெரிவித்துள்ளது.
ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனத்துடன் டிக்டாக் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால், தடை தள்ளிவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆரக்கிள் நிறுவனத்துடன் பைட்டேன்ஸ் நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு டிரம்ப் ஒப்புதல் அளித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால், அமெரிக்காவில் தடையில் இருந்து டிக்டாக் தப்பிக்கும் என தெரிகிறது.