வாகனங்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான தகவல்
வாகன இறக்குமதி வரிகள் மற்றும் சமூக பாதுகாப்பு வரித் தொகையானது வாகனத்தின் அடிப்படைப் பெறுமதியுடன் சேர்க்கப்படுவதால், அதன் மேல் மேலதிகமாக 18 சதவீத VAT வரி விதிக்கப்படும் சூழல் உருவாகும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதி வரிகள் மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி தொடர்பாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த (Anil Jayantha) அண்மையில் வெளியிட்ட கருத்துகளுக்கு பதில் அளித்த போதே அந்த சங்கம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி அந்த சங்கம் மேலும் தெரிவித்ததாவது, தற்போது விற்பனைப் புள்ளியில் அறவிடப்படும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL), எதிர்வரும் 2026 ஏப்ரல் 1 முதல் இறக்குமதி நிலையிலேயே அறவிடப்படவுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள முறைப்படி, மொத்த வருமானத்தில் 50 சதவீத அடிப்படையில் 1.25 சதவீத வரி மட்டுமே அறவிடப்படுகிறது. ஆனால், புதிய மாற்றத்தின்படி 100 சதவீத விற்றுமுதல் அடிப்படையில் முழுமையான 2.5 சதவீத வரி அறவிடப்படும் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த முழுமையான வாகன இறக்குமதி வரிகள் மற்றும் சமூக பாதுகாப்பு வரித் தொகையானது வாகனத்தின் அடிப்படைப் பெறுமதியுடன் சேர்க்கப்படுவதால், அதன் மேல் மேலதிகமாக 18 சதவீத VAT வரி விதிக்கப்படும் சூழல் உருவாகும் என சங்கம் எச்சரித்துள்ளது.
ஒருமுறை மட்டும் வாகனங்களை இறக்குமதி செய்யும் தனிநபர்கள் இந்த வரியைச் செலுத்துவதைத் தவிர்ப்பதைத் தடுக்கவே, இறக்குமதி நிலையிலேயே வரியை அறவிட வேண்டும் என சங்கம் முன்மொழிந்திருந்தது.
இதேவேளை, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த இது குறித்து தெரிவித்ததாவது, வாகன இறக்குமதிக்கான புதிய வரிகள் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றும், வரி அறவிடப்படும் இடமே மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வரி அதிகரிப்பு தொடர்பான செய்திகள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் பரப்பப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.