தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வடகடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

தாய்லாந்து நிலப்பகுதியில் நிலைகொண்டிருக்கும் நவுல் புயல் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வடகிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு வர உள்ளது.

இந்த புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக வங்கக்கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற மீனவர்கள் இன்றே கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா, தெற்கு வங்கக்கடல், அந்தமான் கடற்பகுதிக்கு 4 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக மாம்பலம், சோழிங்கநல்லூரில் தலா 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆலந்தூர், புரசைவாக்கம், பெரம்பூர், மயிலாப்பூரில் தலா 7 செ.மீ., தண்டையார்பேட்டையில் 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.