முகநூல் மூலம் மீளவும் கிடைத்த பறந்து சென்ற ‘கிளி’ -கடும் மகிழ்ச்சியில் இளைஞன்

முகநூல் மூலம் மீளவும் கிடைத்த பறந்து சென்ற ‘கிளி’ -கடும் மகிழ்ச்சியில் இளைஞன்

தான் வளர்த்து வந்த ரூபா 40 ஆயிரம் மதிப்பிலான கிளி பறந்து போன நிலையில், பேஸ்-புக் மூலம் மீண்டும் கிடைத்தது இளைஞரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

தமிழகத்தின் திருவனந்தபுரம் அருகே குண்டமண்கடவு பகுதியை சேர்ந்த ஷெர்பின் என்ற இளைஞன் நன்றாக பேசக் கூடிய ஆபிரிக்க கிளி ஒன்றை ரூபா 40 ஆயிரம் கொடுத்து வாங்கி ஆசையுடன் வளர்த்து வந்தார். அதற்கு ‘மிலோ’ என்று பெயரிட்டு அழைத்து வந்தார். ஆனால் ஷெர்பினுடன் மிலோ கிளி நன்கு பழகாத நிலையில் காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, உணவு கொடுக்கும்போது எதிர்பாராதவிதமாக கூண்டில் இருந்து ‘மிலோ’ வெளியே பறந்து விட்டது. இதனால் கடும் கவலையடைந்த ஷெர்பின், இந்த விபரத்தை பேஸ்புக் பக்கத்தில் ‘மிலோ’வின் படத்துடன் பதிவிட்டார்.

இதையடுத்து அவரது நண்பர்களும் அதை மறுபதிவிட்டனர். இந்த நிலையில் ‘மிலோ’ பேரூர்க்கடையை சேர்ந்த குரியன் ஜோனின் வீட்டில் வந்து இறங்கியது. பேஸ்-புக்கில் விபரம் அறிந்தவர், தனது வீட்டில் ‘மிலோ’ உள்ள விபரத்தை தெரிவித்தார். இதைப்பார்த்த ஷெர்பினின் பேஸ்-புக் நண்பரான அருண் தகவல் தெரிவிக்க, பேரூர்க்கடை சென்று கிளியை பிடித்து வந்தனர்.

தனது வளர்ப்புக்கிளி மீண்டும் கிடைத்தது ஷெர்பினுக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது. இனி ‘மிலோ’வை கண்ணும், கருத்துமாக பார்ப்பேன் என அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.