பலாப்பழத்தில் விஷம் வைத்து 3 பசு மாடுகள் கொலை - விலங்குகளுக்கு தொடரும் சோகம்
கேரளாவில் வெடிவைத்து கர்ப்பிணி யானையை கொலை செய்தது போல், கர்நாடகாவில் மர்ம நபர்கள் பலாப்பழத்தில் விஷம் வைத்து 3 பசுமாடுகளை கொன்ற கொடூரம் நடந்துள்ளது.
பசு மாடுகள் கொலை
சிக்கமகளூரு:
கேரளாவில் சமீபத்தில் கர்ப்பிணி யானை ஒன்று வெடிமருந்து வைத்த அன்னாசி பழத்தை சாப்பிட்டதால் வெடித்து சிதறி, பலத்த காயம் அடைந்தது. அந்த வலியை தாங்க முடியாமல் மூன்று நாட்களாக தண்ணீர் மூழ்கி நின்று பரிதாபமாக இறந்தது.
பன்றி வேட்டைக்காக கேரளாவில் இவ்வாறு வெடிமருந்தை வைத்து பயன்படுத்துவது வழக்கம். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் தாக்கம் மனதை விட்டு அகலுவதற்கு முன்பாக, இதே போன்ற சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
சிக்கமகளூரு தாலுகா பசரவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிட்டே கவுடா. இவருக்கு சொந்தமாக 2 பசுக்கள் இருந்தன. அதே கிராமத்தை சேர்ந்த மது என்பரிடம் ஒரு பசு இருந்தது. இவை மூன்றும் அருகில் உள்ள தோட்டத்தில் மேய சென்றன. அங்கிருந்த பலாப்பழத்தை சாப்பிட்டன. சிறிது நேரத்தில் 3 பசுக்களும் துடிதுடித்து பரிதாபமாக இறந்தன.
இது பற்றி தகவல் கிடைத்ததும் அங்கே சென்ற கிட்டே கவுடாவும், மதுவும் போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அடிக்கடி தோட்டத்துக்குள் சென்று மாடுகள் மேய்ந்ததால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள், பலாப்பழத்தில் விஷம் வைத்து அவற்றை கொன்றது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.